பக்கம் எண் :

பக்கம் எண்:784

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
         ஒழிந்த மாதர்க் குரைப்பதை யுண்டெனிற்
         றனித்துநீ கண்டரு ளவைக்கு ளென்னெனப்
 
                (வாசவதத்தை சினத்தல்)
             18 - 19 : ஒழிந்த.........என்னென
 
(பொழிப்புரை) அது கேட்ட வாசவதத்தை சினந்து "பெருமானே ! ஈண்டு வாரா தொழிந்தவளுக்கு நீ கூறவேண்டிய காரியம் ஏதேனுமிருப்பின் அவளைத் தனியிடத்தே கண்டு கூறியருள்வதே தகுதியாம்; ஈண்டு அவையின்கண் அவட்கு நீ கூறலாவது என்னையோ ?" என்று கூறாநிற்ப வென்க.
 
(விளக்கம்) வாராதொழிந்த மாதர்க்கு என்க. உரைப்பதை - கூறவேண்டிய காரியம். ஐ : சாரியை. அவை - பள்ளியம்பலம். அவைக்குள் நீ அவட்குக் கூறத்தக்க காரியம் என்னை என்று வினவியபடியாம். இவ்வூடல் மொழிகள் பெரிதும் நம்மனோர்க்கின்பந் தருதலுணர்க.