பக்கம் எண் :

பக்கம் எண்:785

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
           
   20      படைமலி நயனங் கடைசிவப் பூரும்
           திறனவண் மொழியொடு தெளிந்தன னாகிப்
           பற்றா மன்னன் படைத்தவும் வைத்தவும்
           உற்றவ ளறியு முழையரிற் றெளிந்தேன்
           மதிவே றில்லென வாசவ தத்தையும்
   25      கரும முன்னிக் குருசில்..........
 
                 (உதயணன் கூறுதல்)
                20 - 25 : படை.........குருசில்
 
(பொழிப்புரை) அது கேட்ட மன்னவன் அம்பும் வேலும் ஆகிய படைக்கலன் போன்று கூர்த்த வாசவதத்தையின் கடைக் கண்கள் சிவக்கும் தன்மையை அவள் கூறிய மொழியோடே தெளிந்து கொண்டவனாய், "தேவீ ! சினவாதே கொள் ! ஈண்டு வாராதொழிந்த அத் தோழி நம் பகைமன்னனாகிய ஆருணியரசன் ஈட்டிய பொருள்களையும், அவன் சேமித்து வைத்த பொருள்களையும் நன்கு அறிவாளாம். இச் செய்தியை யான் என் ஒற்றராலே அறிந்துளேன் காண் ! அவற்றை அவளை வினவிக் காண்டற்கே யான் அவளைப்பற்றி நின்னை வினவினேன். அவளை யான் காண விரும்புதற்குரிய நினைவு பிறிதொன்றில்லை காண் !" என்று கூறித் தேற்றா நிற்றலாலே மன்னனுடைய இப் பன்மாயப் பணிமொழியைக் கேட்ட அவ் வாசவதத்தை தானும் ஞெரேலெனச் சினந்தணிந்து நம் பெருமான் அரசியற் காரியத்தைக் கருதியே...............என்க.
 
(விளக்கம்) படைத் தன்மைமிக்க நயனம் என்க. திறன் - தன்மை. அவள் மொழியிலேயே அச்சினந் தெளிதலின் மொழியொடு தெளிந்தனன் என்றார். படைத்த - ஈட்டிய பொருள். வைத்த - சேமித்து வைத்த பொருள். அவள் அவனுக்கு உற்றவளாயிருந்து அறியும் எனினும் பொருந்தும். உழையர் என்றது ஒற்றரை; அமைச்சர் எனினுமாம். மதி - நினைவு. 25 ஆம் அடியில் இறுதிச்சீரும் அடுத்த ஓர் அடியும் அழிந்தன. இவற்றுள் வாசவதத்தை ஊடனீங்கி அவளை அழையா நிற்ப என்னும் பொருளுடைய சொற்கள் இருந்திருத்தல் வேண்டும்.