பக்கம் எண் :

பக்கம் எண்:786

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
         பூக்கமழ் குழலி புகுந்தடி வணங்கலின்
         நோக்கின னாகி வேற்படை வேந்தன்
         பைந்துணர்த் தொடையற் பாஞ்சா லரசற்கு
         மந்திர வோலையும் வழக்கறை காவலும்
    30   தந்திர நடாத்தலுந் தகையுடைக் கோலம்
         அந்தப் புரத்திற் கணிதலு மெல்லாம்
         நின்னைச் சொல்லுவர் நன்னுதல் பெயரும்
         துன்னருஞ் சுற்றமு முன்னுரை யென்றலும்
 
           (மானனீகையை மன்னவன் வினாதல்)
             26 - 33 : பூக்கமழ்.........என்றலும்
 
(பொழிப்புரை) மலர் மணங்கமழும் கூந்தலையுடைய மானனீகை பள்ளியம்பலத்திலே புகுந்து மன்னனை வணங்கா நிற்ப ; வேலேந்தும் அம்மன்னவன் அவளை விருப்பத்தோடு நோக்கியவனாய், "நல்ல நுதலையுடையோய்! பசிய பூங்கொத்துக்களாலியன்ற மாலையையணிந்த பாஞ்சால மன்னனுக்குத் திருமந்திர ஓலை வரைதலும், அவன் வழக்குரை அறையைக் காத்தலும், அவன் படைகளை நடத்துதலும். அம்மன்னவனுடைய உவளகத்தின்கண் அவன் தேவியர்க்கு ஒப்பனை செய்தலும் ஆகிய இக்காரியங்களையெல்லாம் நீயே செய்து வந்தனை என்று அறிந்தோர் நின்னையே சுட்டிச் சொல்லா நிற்பர். நல்லது நங்காய்! நின்னுடைய பெயரையும் நின்னுடைய பெறுதற்கரிய நெருங்கிய சுற்றத்தார் பெயரையும் முற்பட எனக்குக் கூறுவாயாக" என்று பணித்தலும்; என்க.
 
(விளக்கம்) குழலி : மானனீகை. நோக்கினனாகி என்பது விரும்பி நோக்கினனாகி என்பதுபட நின்றது. வணங்கலின் என்றது எளிதாக நோக்குதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. வேந்தன் : உதயணன். துணர் - பூங்கொத்து. தொடையல் - ஒருவகை மாலை. பாஞ்சால் - பாஞ்சாலம்: விகாரம். வழக்கறை - அரசன் வழக்குத் தீர்க்கும் அறை. தந்திரம் - படை. கோலம் - ஒப்பனை. அந்தப்புரம் - தேவிமார்க்கு ஆகுபெயர். நன்னுதல் : அன்மொழி: விளி; முன்னிலைப்புற மொழியுமாம். துன் - நெருங்கிய. அருஞ்சுற்றம் - பெறற்கரிய தாயும் தந்தையும், முன்னுரை என்றது பின்னர் உரைத்தற்குரியனவும் உள்ளன என்பதுபட நின்றது.