உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
வாட்டிறல் வேந்தனை
வணங்கித் தன்கை 35 கூட்டின ளாகி மீட்டவண்
மொழிவோள் கோசலத் தரசன்
மாபெருந் தேவி மாசில் கற்பின்
வசுந்தரி யென்னும் தேனிமிர்
கோதை சேடி யேன்யான் மான னீகை
யென்பதென் னாமம்
|
|
(மானனீகை
கூறல்)
34 - 39 :
வாள்.........நாமம்
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட மானனீகை மீண்டும் தன் கைகளைக் கூப்பி வாளாற்றலுடைய அம்மன்னனை வணங்கிக்
கூறுபவள், "வேந்தர் வேந்தே ! என் பெயர் மானனீகை என்பதாம். யான் கோசல நாட்டு
அரசனுடைய கோப்பெருந்தேவியாகிய குற்றமற்ற கற்பினையுடைய வண்டுகள் முரலும்
மலர்மாலையணிந்த ''வசுந்தரி'' என்னும் அரசியின் வண்ணமகள் ஆவேன்;"
என்க.
|
|
(விளக்கம்) வேந்தன் : உதயணன். அவள் மீட்டுத் தன் கை
கூட்டினளாகி வணங்கி மொழிவோள் என மாறிக் கூட்டுக. இமிர் - முரலுகின்ற. சேடி -
தோழி. ஈண்டு வண்ணமகள் என்க. வண்ணமகள் - ஒப்பனை செய்யும் பணிப்பெண். அழகிய
மகளாவேன் என்றும் ஒரு பொருள் தோன்றிற்று. நாமம் -
பெயர்.
|