பக்கம் எண் :

பக்கம் எண்:791

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
           
      55  தேவியைப் புனைந்தபின் மேவிய வனப்பொடு
          காவலற் காட்டக் கண்டன னாகி
          அழித்தலங் கார மறியா ளிவளெனப்
          பழித்தியான் புனைநெறி பாரெனப் புனைவோன்
          பற்றிய யவன பாடையி லெழுத்தவள்
      60  கற்றன ளென்றெடுத் துற்றவ ருரைப்ப
          கேட்டன னாதலிற் கோற்றொடி நுதன்மிசைப்
          பூந்தா தோடு சாந்துறக் கூட்டி
 
              (உதயணன் செயல்)
           55 - 62 : மேவிய..........கூட்டி
 
(பொழிப்புரை) இவ்வாறு மானனீகையாலே புனையப்பட்டுப் புதிதாகப் பொருந்திய அழகோடு சென்று வாசவதத்தை அவ்வழகினை உதயண மன்னனுக்குக் காட்டக் கண்டவனாய் வாசவதத்தையை நோக்கி "அவந்திகாய்! கேள்! நின் இயற்கையழகிற்கேற்ப அலங்காரம் செய்தலை அம்மானனீகை அறியாள்" என்று பழித்துக் கூறி "அன்புடையோய்! நின் பேரழகிற்கேற்ப யான் உனக்கு அலங்காரம் செய்யும் வகையைப் பார்!" என்று முன்னைய அலங்காரத்தை அழித்துப் புதுவதாகப் புனையத் தொடங்குபவன், அம்மானனீகை தான் கற்றற்கு அவாவிய யவன மொழியின் எழுத்துக்களை நன்கு கற்றிருக்கின்றனள் என்று தன் தோழர் தனக்குக் கூறியதைக் கேட்டிருந்தனனாதலின், வாசவதத்தையின் நெற்றியின்மேல் பூந்துகளையும் சந்தனத்தையும் நன்கு பொருந்தக் குழைத்துக் கொண்டு என்க.
 
(விளக்கம்) மேவிய வனப்பு - ஒப்பனையால் எய்திய புத்தழகு. காவலற்கு : உதயணனுக்கு. இவள் - மானனீகை. புனைவோன் : பெயர். யவனபாடை - யவனமொழி. உற்றவர் - தோழர். கோற்றொடி - திரண்ட வளையலணிந்த வாசவதத்தை. சாந்து - சந்தனம்.