பக்கம் எண் :

பக்கம் எண்:792

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
         ஒடியா விழுச்சீ ருதயண னோலை
         கொடியேர் மருங்குற் குயின்மொழிச் செவ்வாய்
   65    மான னீகை காண்க சேணுயர்
         மாட மீமிசை மயிலிறை கொண்டென
         ஆடன் மகளிரொ டமர்ந்தொருங் கீண்டி
         முந்துபந் தெறிந்தோர் முறைமையிற் பிழையாப்
         பந்துவிளை யாட்டினுட் பாவைதன் முகத்துச்
   70    சிந்தரி நெடுங்கணென் னெஞ்சகங் கிழிப்பக்
 
                   (இதுவுமது)
           63 - 70 : ஒடியா............கிழிப்ப
 
(பொழிப்புரை) அந்த யவன எழுத்தாலே, "கெடாத சிறந்த பெரும்புகழையுடைய உதயண மன்னன் வரைந்த ஓலை இது ; இதனைப் பூங்கொடிபோன்ற நுண்ணிடையையும் குயில்போன்ற இன்மொழியையும் சிவந்த வாயையும் உடைய மானனீகை என்னும் மடந்தை காண்க! பாவாய்! நீ மிக உயர்ந்த மேனிலை மாடத்தின்கண் மயில்கள் கூடி இருந்தாற்போன்று கூடி இருந்த ஆடல் மகளிரொடு சேர்ந்து ஒருங்கே நினக்கு முன்னர்ப் பந்தெறிந்த மகளிர் முறைமையிலே தவறாதபடி நீ ஆடிய அப்பந்து விளையாட்டின்கண் நின்னுடைய திருமுகத்தின்கண் உள்ள செவ்வரி சிதறிய நெடிய கண்ணாகிய வேல் என் நெஞ்சினைக் கிழித்தமையாலுண்டான என்க.
 
(விளக்கம்) ஒடியா - கெடாத. உதயணன் வரைந்த ஓலை என்க. மருங்குல் - இடை. மீமிசை - மேலே. இறை கொண்டன - தங்கி இருந்தாற்போல ஆடிய பந்து விளையாட்டினுள் என்க. பாவை : முன்னிலைப் புறமொழி. உன்னுடைய என்பது பொருள். அரி சிந்து கண் என்க. அரி - செவ்வரி. கிழிப்ப என்னும் வினைக்கேற்ப கண்ணாகிய வேல் என்க.