உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
கொந்தழற் புண்ணொடு
நொந்துயிர் வாழ்தல்
ஆற்றே னவ்வழ லவிக்குமா
மருந்து கோற்றேன்
கிளவிதன் குவிமுலை யாகும்
பந்தடி தானுறப் பறையடி யுற்றவென் 75 சிந்தையு
நிலையுஞ் செப்புதற்
கரிதெனச் சேம மில்லாச்
சிறுநுண் மருங்குற் காதார
மாகி யதனொடு தளரா
அருந்தனந் தாங்கி யழியுமென்
னெஞ்சிற் பெருந்துயர்
தீர்க்கு மருந்து தானே
|
|
(இதுவுமது) 71
- 79 :
கொந்தழல்........தானே
|
|
(பொழிப்புரை) பல சுடராகிய கொத்துக்களையுடைய நெருப்புப் போன்று துன்புறுத்தா நின்ற அந்தப் புண்ணோடு
நொந்து உயிர் வாழ்தற்கு யான் இனி ஆற்றேன்காண்! அந்தக் காமத்தீயினை அவிக்கும்
சிறந்த மருந்து யாதெனின் கொம்புத்தேன் போன்று தித்திக்கும் மொழியினையுடைய நின்
குவி முலையே ஆகும் கண்டாய்! நீ பந்தடியாநிற்ப அதுகண்டு என் மனம் பறையடிக்கலாயிற்று !
அங்ஙனம் ஆகிய என் சிந்தையும் நிலைமையும் கூறிக் காட்டுதற்கு அரிது காண்! (எனவும்)
என் நெஞ்சம் என்னைவிட்டு நின்பால் வந்து பாதுகாவலில்லாத உன்னுடைய சிறிய நுண்ணிய
இடை ஒடியும் என்று இரங்கி அதற்கு ஆதாரமாக இயைந்து அது தளருங்கால் தான் தளராது நின்று
அதனால் சுமத்தற்கரிய நின் முலைகளைத் தானே தாங்கி அழியா நிற்கும் என் நெஞ்சினது
இத்தகைய பெரிய துயரைத் தீர்த்தற்குரிய மருந்து நீயே கண்டாய் பிறிதில்லை காண்!"
(எனவும்); என்க.
|
|
(விளக்கம்) கொந்தழல் - பல சுடர்களையுடைய நெருப்பு.
அவ்வழல் - அக்காம நெருப்பினை. மாமருந்து - சிறந்த மருந்து. கோற்றேன் கிளவிதன் -
நின்னுடைய; கொம்புத் தேன்போன்று தித்திக்கும் சொல்லையுடைய நின்னுடைய என்பது
பொருள். பறையடியுற்ற - நடுங்கிய. சேமம் - காவல்; ஈடுமாம். எனவே சேமமில்லா மருங்குல்
என்றது ஒடியுங்கால் தனக்கு ஈடாக மற்றோர் இடை இல்லாத தனி இடை என்பது கருத்தாயிற்று.
நீ பந்தாடுங்கால் என் நெஞ்சு நின் இடை ஒடியும் என்று அஞ்சி அதனோடியைந்து நின்று அது
தளர்ந்துழித் தான் தளராமல் அதனாற் சுமக்கமாட்டாத நின் தனங்களைத் தான் சுமந்தும்
அழியும் என நன்கு விரித்தோதுக. ஆதாரம் - பற்றுக்கோடு. அதனொடு - அவ்விடையோடு.
அருந்தனம் - சுமத்தற்கரிய கொங்கை, தானே -
நீயே.
|