பக்கம் எண் :

பக்கம் எண்:794

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
            துன்றிய வேற்கட் டொழிலுமெய் யழகும்
          பைங்கொள் கொம்பாப் படர்தரு மிந்நோய்
          ஆழ்புனற் பட்டோர்க் கரும்புணை போலச்
          சூழ்வளைத் தோளி காமநற் கடலிற்
          றாழ வுறாமற் கொள்க தளர்ந்துயிர்
    85    சென்றாற் செயன்முறை யொன்றுமி லன்றியும்
          அடுக்கிய விளமை தலைச்செலி னாந்தரக்
          கிடைப்பதி லிரப்போர்க் களிப்பது நன்றென
 
                    (இதுவுமது)
            80 - 87 : துன்றிய............நன்றெ
 
(பொழிப்புரை) "நெருங்கிய வேல்போன்ற நின்னுடைய கண்கள் இயற்றிய தொழில்களையும், நினது மெய் அழகினையும் பசிய கொள்கொம்பாகக் கொண்டு இக் காமநோய் இடையறாது படராநிற்கும்; சுற்றிய வளையினையுடைய தோளையுடையோய் ! இந்தக் காமமாகிய பெருங்கடலிலே யான் அழுந்தாதபடி நீ ஆழ்ந்த நீரின்கண் அகப்பட்டோர்க்கு அரிய தெப்பம்போல எனக்கு உதவி உய்யக் கொள்வாயாக! எனவும் இந் நோயால் மெலிந்து உயிர் போய்விடின் பின்பு நீ செய்தற்குரிய உதவி யாதொன்றுமில்லை. அன்றியும் யாம் எய்திய இவ்விளமைப் பருவம் போய்விடின் அதனை யாம் மீண்டும் வருவித்துக்கொள்ள அது நமக்குக் கிடைப்பதும் இல்லை. நங்காய்! யாதொன்றாயினும் இல்லென்று இரப்போர்க்கு ஈவது நல்லறமேயாகும் (எனவும்)" என்க.
 
(விளக்கம்) துன்றிய - நெருங்கிய. கண்தொழில் என்றது முன்னர் 12 ஆம் காதையில் (251) "ஒளித்தவும்......(261) சுவையொடு தோன்ற" எனக் கூறப்பட்டவை. கொள்கொம்பு - கொடிகள் பற்றிக்கொண்டு படரும் கொம்பு. இந்நோய் - இக் காமநோய். புனற்பட்டோர்க்கு அரும்புணை உதவுமாறுபோல யான் காமக் கடலில் அழுந்தாதபடி உதவி என்க. காம நற்கடல் என்புழி நன்மை பெருமைப்பண்பு குறித்து நின்றது. தாழ்வுறாமல் - அழுந்தாதபடி. தலைச்செலின் - போனால்.