பக்கம் எண் :

பக்கம் எண்:796

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          கோயில் குறுக வாய்வளை யணுகலும்
    95    காவலன் புனைந்தது காணெனக் கண்ட
          காசறு சிறப்பிற் கோசலன் மடமகள்
          வாசக முணராக் கூசின ளாகிப்
          பெருமக னெழுதிய பேரலங் காரத்
          திருமுக மழகுடைத் தெனமருட் டினளாய்
    100   உட்கு நாணு மொருங்குவந் தடைய
          நற்பல கூறி யப்பகல் கழிந்தபின்
 
        (வாசவதத்தையின் முகவெழுத்தை மானனீகை காணல்)
                 94 - 101 : கோயில்.........பின்
 
(பொழிப்புரை) வாசவதத்தை தனது மாளிகையை எய்தி அழகிய வளையலணிந்த அம் மானனீகை தன்பால் வந்த உடனே "தோழீ! இன்று நம் பெருமான் எனக்குச் செய்த ஒப்பனையைக் காண்பாயாக" என்று கூற அவ்வொப்பனையைக் கூர்ந்து நோக்கிய குற்றமற்ற சிறப்பினையுடைய அக் கோசலமன்னன் மடமகள் தேவியின் நெற்றியில் உதயணன் யவன எழுத்தாலே எழுதி விடுத்த மொழிகளை உணர்ந்து பெரிதும் நாணியவளாய் அந் நாணத்தைப் புறந்தோன்றாமே தேவியை நோக்கி, "பெருமாட்டீ ! நம் பெருமான் எழுதிய பேரலங்காரத் திருமுகம் மிகமிக அழகுடைத்து" என்று வித்தகம்படக் கூறி அத்தேவியை மருட்டினளாய்த்
தன்நெஞ்சத்தே அச்சமும் நாணமும் ஒருங்கே வந்து சேர்தலாலே அவற்றை மறைத்தற்கு நல்லன பலவற்றைக் கூற அப் பகற்பொழுது கழிந்த பின்னர் என்க.
 
(விளக்கம்) கோயில் - ஈண்டு உவளகம். ஆய்வளை : மானனீகை. காவலன் : உதயணன். காசு - குற்றம். கோசலன் - கோசலமன்னன். மடமகள் : மானனீகை. உணரா - உணர்ந்து. பெருமகன் - பெருமான்; அரசன். பெருமகன் எழுதிய பேரலங்காரத் திருமுகம் அழகுடைத்து என வரும். இம்மானனீகையின் மொழி அரசனால் கோலமெழுதப்பட்ட பெரிய ஒப்பனையையுடைய நினது திருமுகம் அழகுடைத்து எனவும், அரசன் எழுதிய பெரிய அணி இலக்கணம் பொருந்திய ஓலைப் பாசுரம் மிகவும் இன்பமுடைத்து எனவும், இருபொருள் வழங்கி இன்பந்தருதல் உணர்க. உட்கும் நாணும் பெண்மைக் குணங்கள். நற்பல - நல்லனவாகிய பல மொழிகள். கூறி - கூற.