பக்கம் எண் :

பக்கம் எண்:798

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
         
    110    முழுதிய லருள்கொண் டடியனேன் பொருளா
          எழுதிய திருமுகம் பழுதுபட லின்றிக்
          கண்டேன் காவல னருள்வகை யென்மாட்
          டுண்டே யாயினு மொழிகவெம் பெருமகன்
          மடந்தையர்க் கெவ்வா றியைந்ததை யியையும்
    115    பொருந்திய பல்லுரை யுயர்ந்தோர்க் காகும்
          சிறியோர்க் கருளிய வுயர்மொழி வாசகம்
          இயைவ தன்றா லிவ்வயி னொருவரும்
 
                   (இதுவுமது)
           110 - 117 : முழுது..........அன்றால்
 
(பொழிப்புரை) ''எம் பெருமான் தமது முழுப் பேரருளையும் மேற்கொண்டு அடிச்சியாகிய எளியேனை ஒரு பொருளாக மதித்து எழுதிய திருமந்திர ஓலையை (திருமுகத்தை) என் குறை நேராதபடி விழிப்புடன் ஓதியுணர்ந்தேன். எம்பெருமான் திருவருள் வகை அடிச்சியின்பால் உண்டு என்பதனை அறிந்தேன். ஆயினும் எம்பெருமான் என்னிடத்துக்கொண்ட அத்திருவருளை ஒழிக! என்னைப்போன்ற பிற மகளிர்க்கு எம்பெருமான் கருதியது எவ்வாறு பொருந்தும்? அவ்வியத்தகு ஓலைப் பாசுரத்தில் அமைந்துள்ள பல மொழிக் கோவையாகிய எம்பெருமான் அருளிய உயர்மொழி வாசகம் கோப்பெருந்தேவிபோன்ற அரச மகளிர்க்கு நன்கு பொருந்துவதாகும். என்னைப்போன்ற பணி மகளிர்க்கு ஒரு சிறிதும் பொருந்துவதன்று'' என்க.
 
(விளக்கம்) பொருளா - ஒரு பொருளாகக் கருதி. எழுதிய திருமுகம் - எழுதப்பட்ட ஓலை. (எழுதப்பட்ட தேவியின் அழகிய நெற்றி). காவலன், பெருமகன் என்பன முன்னிலைப் புறமொழி. மடந்தையர் என்பது பிற மகளிர் என்பதுபட நின்றது. இயைந்ததை - கருதியது. ஐ : சாரியை. பெருமகன் இயைந்தது பிற மடந்தையர்க்கு எவ்வாறு இயையும் என்க. தேவிமார்போன்ற உயர்ந்தோர்க்கு எனவும் என் போன்ற சிறியோர்க்கு எனவும் கூறிக் கொள்க.