உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
இயைவ
தன்றா லிவ்வயி
னொருவரும் காணா
ரென்று காவலு
ளிருந்து பேணா
செய்தல் பெண்பிறந் தோருக் 120
கியல்பு மன்றே யயலோ
ருரைக்கும் புறஞ்சொலு
மன்றி யறந்தலை நீங்கும்
திறம்பல வாயினுங் குறைந்தவென்
றிறத்து வைத்ததை
யிகழ்ந்து மறப்பது பொருளென
உற்றவண் மறுமொழி மற்றெழு தினளாய்
125 அடியேற் கியைவ திதுவென விடலும் |
|
(இதுவுமது) 117
- 125 : இவ்வயின்..........விடலும் |
|
(பொழிப்புரை) ''இவ்விடத்தே யாம் மறைந்து செய்யும்
செயல்களை யாரும் காணமாட்டார் என்னும் கருத்தால் காவல் அமைந்த இடத்தில்
இருந்துகொண்டு சான்றோரால் விரும்பப்படாத செயல்களைச் செய்தல் அடிச்சியேன்போன்று
பெண்ணாகப் பிறந்தவர்களுக்குத் தகுதியுமன்று. அங்ஙனம் செய்யின் பிறர் கூறும்
பழிச்சொல் பரவுதலே யன்றி நல்லறமும் ஒருதலையாக நீங்குவதாம்: இனி இங்ஙனம்
செய்தலின் உண்டாகும் நலம் பல உள என்று பெருமான் கருதுவதாயினும் பெருமான் தகுதிக்கு
மிகமிகத் தாழ்ந்த என்பால் பெருமான் வைத்த திருவருளை எள்ளி விடுதலோடன்றி அதனைத்
துவர மறந்துவிடுதலே நல்ல காரியமாம்!'' என்று அவள் நெஞ்சு பொருந்தி அம்மன்னனுக்கு
மறுமொழி எழுதியவளாய் வாசவதத்தையை நோக்கி, ''பெருமாட்டி ! அடியேனுக்குச்
செய்தற்கியன்ற அலங்காரம் இவ்வளவே,'' என்று கூறி அவளை விடுத்தலும்;
என்க. |
|
(விளக்கம்) இவ்வயின் - இவ்வரண்மனையின்கண். காவல் - காவலமைந்த இடம். பேணா செய்தல் -
சான்றோரால் விரும்பப்படாத செயலைச் செய்தல். தலைமை செய் தொழுகுதல் ஆடவர்க்கே
உரியது. மகளிர்க்கு இயல்பன்று என்பாள் பெண் பிறந்தோர்க்கு இயல்பும் அன்றே
என்றாள். திறம் - ஈண்டு நன்மை என்பதுபட நின்றது. வைத்த அருளை - என்பால் வைத்த
நினைவை என்று வாசவதத்தைக்குக் கூறிவிடலும் என்க. |