பக்கம் எண் :

பக்கம் எண்:8

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
         
            கைவரை நில்லாக் கையறு கவற்சிகண்
           டின்மொழி விச்சை யிலாமய னென்னும்
           ஆளவி நெஞ்சத் தந்தண னிருந்த
     55    காள வனமும் வெந்தீப் புக்கெனக்
           காதலன் றன்னையுஞ் சாவற லுறீஇ
           மயக்க நெஞ்சமொடு மனம்வலித் திருந்துழி
 
            (தோழர் உதயணனைத் தேற்றல்)
              52 - 57 ; கை.........இருந்துழி
 
(பொழிப்புரை) அத்தோழர்உதயணனுடைய எல்லை
  கடந்த கையறவினையுடைய துன்பத்தைக் கண்டு மிகவும்
  பரிந்து ''பெருமானே! ஊழ்வினையா லுறும் நிகழ்ச்சியினை
  யாவரே மாற்றவல்லார் இனிய மொழியினையும் முக்காலமும்
  உணரும் அரிய வித்தையினையும் உடைய இலாமயன்
  என்னும் தன் முனைப்பற்ற நெஞ்சத்தையுடைய துறவோன்,
  இருந்த காள வனமும் வெவ்விய தீக்கிரையாயிற்றென்று
  யாம் கேட்டிருப்போமல்லமோ?'' என்று கூறி ஒருவாறு
  உதயணனை இறத்தலினின்றும் தவிர்த்துப் பாதுகாத்தலானே
  அவன் பின்னரும் மம்மருற்ற நெஞ்சத்தோடு சிறிது தேறி
  இராநின்ற பொழுது என்க.
 
(விளக்கம்) கைவரை - தன்வயம். கவற்சி - துன்பம்.
  இலாமயன் என்னும் ஒருசிறந்த முனிவன் உறையுளாகிய 
  காளவனம் - தீப்பட்டொழிந்தமை இவர் கூற்றால் உணர்கின்றோம்.
  ஆளவிநெஞ்சம் என்றது தான் என்னும் செருக்கவிந்த தூயநெஞ்சம்
  என்றவாறு. ஆள்-செருக்கிற்குக் காரியவாகுபெயர் என்க. அறலுறீஇ
  - அறலுறுத்தப்பட்டு, முற்றும் தெளிவடையாமையாலே மயக்கமொடு
  இருந்தான் என்றவாறு