பக்கம் எண் :

பக்கம் எண்:801

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          கலங்கின னாகி யிலங்கிழைக் கீதோர்
          நலங்கவின் காட்ட நணுகென வணுகிக்
          கண்ட முறைமையிற் பண்டிய லாக்கவல்
          கொண்டன னாகி யொண்டொடி யாகம்
    135    இன்றை யெல்லையு ளியையா தாயிற்
          சென்றதென் னுயிரெனத் தேவிமுகத் தெழுதி
          வாட்டிறல் வேந்தன் மீட்டனன் விடுத்தலிற்
 
                     (இதுவுமது)
          131 - 137 : இலங்கிழைக்கு..................விடுத்தலின்
 
(பொழிப்புரை) அவ்வாசவதத்தைக்கு ''நங்காய்! இங்கே ஓர் அழகினைத் திருத்திக் கவினுறச் செய்தல் வேண்டும். இங்கு வருக!'' என்று கூறி அவளை அணுகி முன்னர்க் கொள்ளாத பெருங்கவலையைக் கொண்டவனாய் முன்னர்க் கைகண்ட அவ்வுபாயத்தாலேயே ''மானனீகாய்! நின்மார்பு இற்றைநாள் கழியும் முன்பே என் மார்பிற் பொருந்தாதாயின் என் உயிர்போயிற்று'' என்று மீண்டும் அக்கோப்பெருந் தேவியின் முகத்திலே எழுதி வாளாற்றல் பொருந்திய அவ்வேந்தன் மீண்டும் அத்தேவியை விடுத்தலாலே என்க.
 
(விளக்கம்) இலங்கிழைக்கு - நினக்கு. கையாற் சுட்டி - சுட்டிக் கூறலின் ஈதோர் நலம் என்றான். நலங்கவின் காட்டல் - அழகைத் திருத்திப் பின்னும் அழகுறச் செய்தல். நணுகு - இங்கு வருக. நணுகெனக் கூறுமாற்றால் - அவளை அணுகி என்க. கண்ட முறைமை - யவனமொழியால் தேவியின் நெற்றியில் எழுதுவதாகிய முன்பு கண்ட உபாயம் என்க. பண்டு - எஞ்ஞான்றும் வராத கவலை என்க. கவல் - கவலை. ஒண்டொடி - மானனீகாய்; முன்னிலைப் புறமொழி. ஆகம் -  மார்பு. தெளிவால் செல்லும் எனல் வேண்டிய எதிர்காலம் சென்றது என இறந்த காலமாகக் கூறப்பட்டது. என்னை? ''விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும், பிறழவும் பெறூஉம் முக்காலமும் ஏற்புழி''  எனவரும் வழுவமைதிச் சூத்திரத்தால் (நன். சூ. 384) உணர்க. வேந்தன் - உதயணன்.