பக்கம் எண் :

பக்கம் எண்:802

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          பெருமகள் செல்லத் திருமகள் வாசகக்
          கரும மெல்லா மொருமையி னுணர்ந்து
    140    வயாத்தீர் வதற்கோ ருயாத்துணை யின்றி
          மறுசுழிப் பட்ட நறுமலர் போலக்
          கொட்புறு நெஞ்சினைத் திட்பங் கொளீஇ
          விளைக பொலிக வேந்த னுறுகுறை
          களைகுவ லின்றெனுங் கருத்தொடு புலம்பி
 
        (உதயணன் எழுதியதை மானனீகை உணர்தல்)
            138 - 144 : பெருமகள்................புலம்பி
 
(பொழிப்புரை) அக்கோப்பெருந்தேவி தன் மாளிகையிலே சென்று புகாநிற்ப மானனீகை அற்றைநாள் அவள் நெற்றியில் உதயணன் எழுதிவிடுத்த மொழியின் கருத்தையெல்லாம் ஒருமையுற உணர்ந்து தன் உள்ளத்தே தோன்றிய வேட்கை மிகுதி தணிவதற்கு ஓர் உசாத்துணைத் தோழியையும் பெறாளாய் நீர்ச்சுழியின்கண் அகப்பட்ட நறிய மலர்போன்று சுழலா நின்ற தன் நெஞ்சினைத் தானே திண்ணிதாகச் செய்து கொண்டு 'அந்தோ ! ''விளைக ! பொலிக !'' எம்பெருமான் எய்துகின்ற மனக்குறையை  யான் சென்று இன்று தீர்ப்பேன்,' என்னுங் கருத்தை யுடையவளாய்த் தனித் துன்பம் உழந்து என்க.
 
(விளக்கம்) பெருமகள். வாசவதத்தை. திருமகள் : மானனீகை கோப்பெருந் தேவியோடொத்தலின் ஆசிரியர் மானனீகையைத் திருமகள் என்றார். ஒருமையின் - அவனோடு ஒருமையுற்ற மனத்தோடு எனினுமாம். வயா - வேட்கை மிகுதி. உசாத்துணை - துன்ப முற்றுழி வினவுதற்குரிய துணை. சுழி - நீர்ச்சுழி. கொட்புறு - சுழல்கின்ற. ''விளைக பொலிக'' இங்ஙனம் கூறித் துன்புறுவோரை வாழ்த்துதல் பண்டைக்கால வழக்கம். 'வித்தியலையில் விளைக பொலிக' எனவரும் பரிபாடலும் (10 : 86) 'விளைக பொலிக அஃதே யுரைத்திலம்' என வரும் சிந்தாமணியும் (260) காண்க. குறை - மனக்குறை. புலம்பி - தனித்துத் துன்புற்று.