பக்கம் எண் :

பக்கம் எண்:803

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
         
    145    அற்றை வைகல் கழிந்தபி னவளை
          மற்றுய ரணிநலம் வழிநாட் புனைஇக்
          கூத்தப் பள்ளிக் குச்சரக் குடிகையுட்
          பாற்படு வேதிகை சேர்த்தன ளாகி
          அரவுக் குறியி னயலவ ரறியா
    150    இரவுக் குறியி னியல்பட வெழுதி
          மாபெருந் தேவியை விடுத்தபின் மற்றவள்
 
          (மானனீகை மறுமொழி எழுதிவிடுத்தல்)
           145 - 151 : அற்றை....................விடுத்தபின்
 
(பொழிப்புரை) அற்றை நாள் ஒருவாறு கழிந்தபின்னர் மறுநாட்  காலையிலே அத்தேவியை உயர்ந்த ஒப்பனை அழகுண்டாக அலங்காரம் செய்து அவள் நெற்றியில் கூத்தப்பள்ளிக் குச்சரக்குடிகையுள் ஒருபால் அமைந்த மேடையைப் பாம்பு குறிக்கொண்டு  உறையும் இடம்போலப் பிறர் அறியவியலாத இரவுக்குறியின் இடமாகக் குறித்து இலக்கணமுண்டாகத் தேவியின் திருமுகத்தை எழுதி அக்கோப்பெருந் தேவியை விட்டபின்னர் என்க.
 
(விளக்கம்) அவளை : கோப்பெருந்தேவியை. வழிநாள் - மறுநாள். கூத்தப்பள்ளிக் குச்சரக்குடிகை உள்பால் படுவேதிகை - நாடகம் ஆடுதற்குரிய இடத்திலுள்ள கூச்சரநாட்டுச் சிற்பம் அமைந்த குடிசையுள் ஒருபக்கத்தில் அமைந்த திண்ணை. இரவுக்குறி - தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் இரவின்கண் கூடுதற்குக் குறிப்பிட்ட இடம். அரவுக்குறி - பாம்பு குறிக்கொண்டு உறையும் இடம். இஃது இரவுக் குறியிடத்திற்கு உவமை. சேர்த்தனளாகி - குறிப்பிட்டவளாய்.