பக்கம் எண் :

பக்கம் எண்:804

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          மாபெருந் தேவியை விடுத்தபின் மற்றவள்
          தீவிய மொழியொடு சேதிபற் குறுகி
          நோன்றாள் வணங்கித் தோன்ற நிற்றலும்
          திருநுதன் மீமிசைத் திறத்துளிக் கிடந்த
    155    அருளேர் வாசகந் தெருளுற வறிந்து
          மற்றவள் பயந்தனள் பொற்புற வெழுதிய
          இற்றைப் புதுநல மினிதென வியம்பி
          மாதர் நோக்கின் மான னீகைகட்
          காமம் பெருகிக் காதல் கடிகொள
    160    மாமனத் தடக்கித் தேவியொ டினியன
          கூறியப் பகல்போ யேறிய பின்றை
 
        (மானனீகை எழுதியதைக் கண்ட உதயணன் உவத்தல்)
               151 - 161 : மற்றவள்................பின்றை
 
(பொழிப்புரை) அப்பெருந்தேவி இனிய மொழி பேசுபவளாய் அவ்வுதயணமன்னனை அணுகி அவனது வலிய தாள்களை வணங்கி மானனீகை புனைந்து விடுத்த புத்தலங்காரம் தோன்றும்படி அவன் முன்னர் நிற்ப, அவளது நெற்றியின் மேல் முறைப்படி எழுதிக் கிடந்த மானனீகையின் அருளுடைய மொழிப் பொருளைத் தெளிவுண்டாக ஓதி அறிந்து வாசவதத்தையை நோக்கி, 'நங்காய்! அம்மானனீகை நமக்கு அஞ்சியவளாய் இற்றைய நாள் நின் நெற்றிமிசைப் பொலி வுண்டாக வரைந்த புதிய அழகு மிகவும் இனிது !' என்று கூறிக் காதல்மிக்க நோக்கினையுடைய மானனீகையின் திறத்திலே காமம் பெருகிக் காதலாகி மிகாநிற்ப, அதனைத் தனது பெரிய மனத்தின்கண் அடக்கிக்கொண்டவனாய் அக்கோப்பெருந் தேவியோடு கேட்டற்கு இனியனவாகிய காதல் மொழிகள் பல கூறி அப்பகற்பொழுது  சென்றபின்னர்; என்க.
 
(விளக்கம்) தீவிய மொழி - இன்சொல். சேதிபன் : உதயணன். நோன்றாள் - வலிமையுடைய கால். ஒப்பனை அழகுதோன்ற நிற்றலும் என்க. அருளேர் வாசகம் - அருள்பொருந்திய சொல்லின் பொருள். தெருள் - தெளிவு. மற்றவள் பயந்தனள் என்புழி அவள் நமக்கு அஞ்சியவளாய் எனவும் எனக்குப் பயன்பட்டவளாய் எனவும் இரு பொருள் தோன்றுதல் காண்க. மாதர் - காதல். கடிகொள - மிகாநிற்ப. அடக்குதல் அருமை தோன்ற மாமனம் என்றார். தேவி - வாசவதத்தை. பகல் - பகற்பொழுது.