பக்கம் எண் :

பக்கம் எண்:806

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          வென்வேற் றலைவனும் வேட்கை யின்றித்
    165    தேவிய ரிருவர்க்கு மாறுதுயில் கூறக்
 
                (உதயணன் செயல்)
           164 - 165 : வென்வேல்.................கூற
 
(பொழிப்புரை) வென்றி வேலேந்திய தலைவனாகிய அவ்வுதயணன் தானும் தன் தேவிமார் இருவர்பாலும் வேட்கை இலனாய் அவ்விருவர்க்கும் தனித்தனியே தான் துயிலும் இடத்தை மாறாகக் கூறுதலால் என்க.
 
(விளக்கம்) வென்வேல் - வென்றியுடைய வேல். தலைவன் : உதயணன். தேவியர்பால் வேட்கை இன்றி என்றார் அவன் வேட்கை முழுவதும் மானனீகையின்பால் செல்லுதலின். தேவியர்பால் வேட்கை இலனாய் என்பது கருத்து. காமுற்றார் குணம் இன்னதாதலை,

   'சிற்றிடைச் சீதை யென்னு நாமமுஞ் சிந்தை தானும்
   உற்றிரண் டொன்றாய் நின்றா லொன்றொழித் தொன்றை யுன்ன
   மற்றொரு மனமு முண்டோ மறக்கலாம் வழிமற்றி யாதோ
   கற்றனர் ஞான மின்றேற் காமத்தைக் கடக்க லாமோ'
            (கம்ப. மாரீச. 84)

எனவரும் இராமாவதாரத்தானும் உணர்க. மாறுதுயில் கூற என்றது பதுமாபதியின்பால் வாசவதத்தையின் மாளிகையில் துயிலப் போவதாகவும் வாசவதத்தைக்குப் பதுமாபதியின் மாளிகையின்கண் துயிலப் போவதாகவும் மாறுபாடாகக் கூறி என்றவாறு.