பக்கம் எண் :

பக்கம் எண்:807

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          கயிற்பூண் கோதை யயிர்த்தன ளிருப்பப்
          பெயர்த்தன னொதுங்கிப் பெயர்தரக் கண்டே
          காஞ்சன மாலையைக் கைவயிற் பயிர்ந்து
          பூந்தார் மார்பன் புகுமிட னறிகென
    170    ஆய்ந்த வேந்த னாடற் பேரறை
          சார்ந்தபி னொருசிறை சேர்ந்தன ளிருப்பத்
 
        (வாசவதத்தை உதயணனை ஐயுற்று அவன் செயலை
           ஒற்றி வரும்படி காஞ்சனமாலையை விடுத்தல்)
                166 - 171 : கயில்...................இருப்ப
 
(பொழிப்புரை) மூட்டுவாய் அமைந்த அணிகலனணிந்த வாசவதத்தை முன்னரே அம்மன்னவன் கூற்றில் ஐயங் கொண்டவளாய்  இருத்தலினாலே அவன் தன்னை விலக்கியவனாய் ஒதுங்கிப் போதலைக் கண்டு தன் தோழியாகிய காஞ்சனமாலையைக் கையினால் அழைத்து 'ஏடீ! நீ பிறர் அறியாமல் மலர்மாலையணிந்த மார்பினையுடைய நம்பெருமான் சென்று புகும் இடத்தை அறிந்து வருக!' என ஏவுதலாலே, காஞ்சனமாலை அவன் அறியாமல் அவனைத் தொடர்ந்து சென்று, மானனீகை யாண்டுளள்? என்று அவ்விருளின்கண் ஆராய்ந்த அவ்வேந்தன் அக் கூத்தாட்டுக் குச்சரக் குடிகையுள் சென்ற பின்னர்த் தானும் ஒரு பக்கத்தே மறைந்திரா நிற்ப என்க.
 
(விளக்கம்) கயில் - மூட்டுவாய். கோதை - வாசவதத்தை. அயிர்த்தனள் - முன்னரே ஐயுற்றவளாய். இருப்ப - இருந்தமையால். ஐயுற்றமைக்குக் காரணம் இக்காதையுள் 15 ஆம் அடி தொடங்கி 19 ஆம் அடி ஈறாக நோக்கியறிக. பெயர்த்தனன் - தன்னை விலக்கியவனாய். ஒதுங்கி - தன்பால் நின்றும் விலகி. கைவயிற் பயிர்ந்து (வாயால் அழையாமல்) கைகாட்டி அழைத்து. மார்பன் : உதயணன். ஆய்ந்த வேந்தன் - மானனீகை எங்குளள் என்று ஆராய்ந்த உதயணன். ஒரு சிறை - ஒரு பக்கத்தில்.