உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
திருத்தகு மார்பன் கருத்தொடு புகுந்து
விருப்பொடு தழுவி நடுக்கந்
தீரக் கூடிய
வேட்கையி னொருவர்க் கொருவர் 175
ஊடியுங் கூடியு நீடுவிளை யாடியும்
இருந்த பின்றை யிருவரு
முறைமுறை திருந்திய
முகத்துப் பொருந்திய காதலொ
டெழுதிய வாசக மெல்லா
முரைத்து வழுவுத
லின்றி வைகலு மீங்கே 180 குறியெனக்
கூறிச் சிறுவிரன் மோதிரம்
கொடுத்தன னருளிக் கோயிலு ணீங்க
|
|
(உதயணன்
மானனீகையுடன்
அளவளாவல்) 172
- 181 : திருத்தகு...................நீங்க
|
|
(பொழிப்புரை) திருமகள் விரும்பி வீற்றிருத்தற்குத் தகுந்த
மார்பினையுடைய உதயணமன்னன் மானனீகையின் நினைவோடே அக் கூத்தப்பள்ளியுட் புகுந்து
ஆங்குத் தன் வரவினை எதிர்பார்த்திருந்த அம் மானனீகையைப் பேரார்வத்தோடு தழுவி
இருவர் துயரமும் ஒருசேர அகலும்படி ஆங்குக் கூடிய காம வேட்கையினால் ஒருவரோடொருவர் ஊடியும்
கூடியும் நெடும் பொழுது விளையாடியும் இருந்த பின்னர் அவ்விருவரும் முறைமுறையாகத்
திருத்தமுடைய கோப்பெருந்தேவியின் திருமுகத்திலே ஒருவர்பால் ஒருவர்க்குப் பொருந்திய
காதற் பண்போடே எழுதிவிடுத்த மொழிகளையெல்லாம் ஒருவருக்கொருவர் கூறிக் கூறிச்
சிரித்த பின்னர், அம்மன்னவன் அம் மானனீகையை நோக்கி 'ஒருநாளும் தவிர்தலின்றி
இக் கூத்தப்பள்ளியின்கண் நாம் வந்து கூடுதல் வேண்டும்!' என்று கூறித் தனது சிறுவிரல்
மோதிரத்தை அவட்கு அன்புப் பரிசிலாக வழங்கி அரண்மனைக்குட் செல்லாநிற்ப
என்க.
|
|
(விளக்கம்) மார்பன் : உதயணன். கருத்தொடு - மானனீகையின் நினைவொடு. நடுக்கம் : ஆகுபெயர்; துன்பம்
என்க. இருவரும் - உதயணனும் மானனீகையும். வாசவதத்தை முகத்து எழுதிய வாசகம் என்க.
வைகலும் - நாடோறும். ஈங்கே - இக் கூத்தப் பள்ளியிலேயே. குறி - கூடுதற்குக்
குறிப்பிட்ட இடம். கோயில் - அரண்மனை.
|