பக்கம் எண் :

பக்கம் எண்:81

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           செஞ்சுடர் முகத்தே செருமீக் கூரிய
           வெஞ்சின வேந்தர்க்கு நஞ்சுமிழ் நாகத்துத்
           தீயோ ரன்ன திறல வாகி
           முளையேர் முறுவன் முகிழ்த்த சின்னகை
     50    இளையோர் நெஞ்சிற் றளைமுதல் பரிந்தவர்க்
           கமிழ்தம் பொதிந்த வருளின வாகித்
           தலைப்பெருந் தாமரைச் செம்மல ரன்ன
           நலத்தொடு புணர்ந்த விலக்கண நெடுங்கண்
 
           (உதயணன் கண்கள்)
      46-53; செஞ்சுடர்.........நெடுங்கண்
 
(பொழிப்புரை) செவ்வொளி திகழும் முகத்தின்கண்ணே,
  போரிலே மேம்பட்ட வெவ்விய வெகுளியையுடைய பகையரசர்க்கு
  நஞ்சைக் காலுகின்ற பாம்பினது நஞ்சைப்போன்ற திறலுடையனவாய்,
  நாணல் முளைபோன்ற பல்வரிசையினையும் தோன்றாநின்ற
  புன்சிரிப்பையும் உடைய இளமையுடைய மடந்தையரின் நெஞ்சின்கண்
  நிறையை அறுத்து அம்மடந்தையர்க்கு அமிழ்தம்போன்ற அருளைப்
  பொழிவனவாகித் தாமரையினது முதற் பூவாகிய பெரிய சிவந்த
  மலரையொத்த அழகோடு கூடிய நல்லிலக்கணமுடைய நெடிய கண்கள்
  என்க.
 
(விளக்கம்) உதயண மன்னனுடைய கண்கள், பகைவேந்தர்க்குத்
  தீயோரன்ன கண்கள், இளையோர்க்கு அமிழ்தம் பொதிந்த அருளினவாகிய
  கண்கள், செம்மலரன்ன நலத்தொடு புணர்ந்த கண்கள், இலக்கணமுடைய
  கண்கள், நெடுங்கண்கள் எனத் தனித்தனி கூட்டுக. செஞ்சுடர்
  முகம்-ஞாயிறுபோன்ற முகமுமாம். வேந்தர்- பகைவேந்தர் தீ- நஞ்சு.
  உவமவாகுபெயர். தளை - நிறை.  தாமரையினது தலைப்பெருஞ் செம்மலர்
  என்க. இலக்கணம்-கண்ணுக்குரிய நல்லிலக்கணம்.