பக்கம் எண் :

பக்கம் எண்:812

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          தெவ்வா றோவென வியம்பினன் கேட்பநின்
          மனத்துழைப் பெயரா வெனைக்கரந் தெழுந்தனை
          தனித்துப் போயோர் தடந்தோண் மடந்தையொ
    195    டாடரங் கேறி யணைந்திருந் தவளோ
          டூடியு முணர்ந்துங் கூடிவிளை யாடியும்
          தேறினி ராகித் தெளிவுட னிருவிரும்
          மாறுமா றெழுதிய வாசகங் கூறி
          மாதரு நீயு மயலுரைத் தெழுந்து
    200   போதரும் போதையின் மோதிர மருளிப்
          பெயர்ந்தனை நயனமு மலர்ந்தன வாங்கே
          புலர்ந்தது கங்குலும் புரவல வாழ்கென
 
                (வாசவதத்தை கூறல்)
            192 - 202 : நின்..................வாழ்கென
 
(பொழிப்புரை) ''பெருமானே! யான்கண்ட கனவினைக் கூறுவல், கேட்டருள்க! எம்பெருமான் மனத்தினின்றும் அகலாத எனக்கு ஒளித்து எழுந்து தனியே போய் ஒரு பெரிய தோளையுடைய மடந்தையோடே கூத்தாடும் மேடையிலே ஏறி, அவளைத் தழுவி இருந்து அவளோடு ஊடியும் உணர்ந்தும் கூடி விளையாடியும் ஒருவரை ஒருவர் ஆராய்ந்து தெளிவோராய் நீயிர் இருவீரும் தெளிவுண்டாக ஒருவருக்கொருவர் மாறுமாறாக எழுதிவிடுத்த காதற் செய்திகளை ஒருவருக்கொருவர் கூறி மகிழ்ந்து அவளும் நீயும் ஒருவர்பால் ஒருவர் கொண்டுள்ள மயலைக் கூறி அளவளாவிப் பிரிந்து எழுந்துபோகின்ற பொழுதில் பெருமான் நின் சிறுவிரல் மோதிரத்தை அவளுக்கு வழங்கிப் புறப்பட்டாய்! அவ்வளவில் என் கண்கள் விழித்தன ; விழித்துப் பார்க்குங்கால் பொழுதும் புலர்ந்தது, உலகங் காவலனே நீடூழி வாழ்க!'' என்று கூறா நிற்ப என்க.
 
(விளக்கம்) ஆடரங்கு - கூத்தாடு மேடை. தேறினிர் - தெளியும் பொருட்டு. தெளிவுடன் எழுதிய வாசகம் என்க. மயல் - காம மயக்கம். போதையின் - பொழுதில். புரவல என்றது இகழ்ச்சி.