பக்கம் எண் :

பக்கம் எண்:813

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          வண்டலர் கோதாய் மனத்தினு மில்லது
          கண்டனை யாதலிற் கலங்கினை மற்றுநின்
    205    உள்ளத் துள்ளே யுறைகுவே னாகவும்
          கள்வ னென்று கருதினை யன்றியும்
          நெறியுடை மகளிர் நினைப்பவுங் காண்பவும்
          இவையிவை போலுங் கணவர்தந் திறத்தெனக்
 
                 (உதயணன் கூற்று)
              203 - 208 : வண்டலர்..............என
 
(பொழிப்புரை) அதுகேட்ட வுதயணன் வாசவதத்தையை நோக்கி ''வண்டுகள் மொய்க்கும் மலர் மாலையினையுடையோய்! நீ நின் மனத்தினுள் நிகழாத நிகழ்ச்சி ஒன்றனைக் கற்பனையாக நினைந்தனைபோலும். ஆதலின் நீ கலங்கினை ! அந் நினைவே இங்ஙனம் கனவாகப் பரிணமித்தது; பேதாய் ! யான் எப்பொழுதும் நின் நெஞ்சினுள்ளேயே உறைவேனாகவும், நீ என்னை இவ்வாறு கள்வனென்று கருதினைபோலும். அல்லது கற்பு நெறிவழுவா மகளிர் தங்கணவர் திறத்தே நினைப்பனவும் காண்பனவும் ஆகிய நினைவும் கனவும் இவை இவை போல்வன போலும் !'' என்றானாக, என்க.
 
(விளக்கம்) மனத்தின் கண்ணும் இல்லாத தொரு நிகழ்ச்சியை நீ கற்பித்துக் கோடலின் அந்நினைவே உனக்குக் கனவாகத் தோன்றலாயிற்று என்று இங்கு உதயணன் வித்தகமாக மறுமொழி கூறுகின்றான். மனத்தின்கண் உள்ள நினைவு கனாவாகப் பரிணமித்துத் தோன்றுதல் உண்டு என்பதனை, ''ஓர்த்தது இசைக்கும் பறைபோல் நின் நெஞ்சத்து வேட்டதே கண்டாய் கனா'' எனவரும் கலியானும் (62 - 21 - 3) உணர்க. நெறி - கற்பொழுக்கம். நினைக்கும் நினைவும் காணும் கனவும் இங்ஙனம் இருக்கும் போலும். இதனால் குலமகளிர் காரணமின்றியே இங்ஙனம் தங்கணவர் திறத்திலே கனாக் காண்டல் இயல்பு ஆகலின் இதனை ஒரு பொருளாகக் கொள்ளற்க என்று அவளை மருட்டினானாயிற்று.