உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
கனவிற்
கண்டது பிறரொடு பேசக் 210 குறைபோ
மென்றலிற் கூறினே னன்றியும்
யாவை காணினுங் காவலற்
கன்றிப் பேசுவ
தெவரொடு பெரியோ யென்று
மானார் நோக்கி மனத்தொடு
நகையா ஆனா நினைவுட
னகறர வேந்தன்
|
|
(வாசவதத்தை
கூற்று)
209 - 214 : கனவில்..........அகறர
|
|
(பொழிப்புரை) அது கேட்ட வாசவதத்தை, ''பெருமானே !'' ஒருவர்
தாம் கனவிற்கண்ட நிகழ்ச்சியைப் பிறர் ஒருவர் கேட்கக் கூறினால் அக்கனவின் தீமை
நீங்கும் என்று கனா நூல் கூறுதலாலே இக்கனவினை யான் கூறினேன். அல்லாமலும் யான்
எத்தகைய கனவினைக் கண்டாலும் பெருமான்பால் கூறுவதன்றி வேறு யாருக்குக் கூறுகேன் ?'
என்று கூறி மான்போலும் நோக்கினையுடைய அத் தேவி தன் நெஞ்சினுள்ளே நகைத்தவளாய்ப்
பின்னும் அமையாத எண்ணத்தோடே அவ்விடத்தினின்றும் செல்லாநிற்ப
என்க.
|
|
(விளக்கம்) "கனவிற்கண்டது பிறரொடு பேசக்குறைபோம்'' என்றது கனா நூலினின்றும் எடுத்துக்
காட்டியபடியாம். காவலற்கு : முன்னிலைப் புறமொழி. பெரியோய் என்றது இகழ்ச்சி. அகறர
- அகல.
|