பக்கம் எண் :

பக்கம் எண்:817

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
           நிகழ்ந்ததை யறியா னெழுந்து மெல்லென
           நடந்தவன் சென்றவ ளிடந்தலைப் படலும்
           வேந்தன் செய்வது காண்குவ மென்று
           காம்பேர் தோளி கையி னீக்கலும்
 
                (உதயணன் செயல்)
           221 - 224 : நிகழ்ந்ததை...........நீக்கலும்
 
(பொழிப்புரை) இருள் கவிந்ததும் இங்கு நிகழ்ந்த நிகழ்ச்சியை அறியாதவனாய் உதயணமன்னன் அம்பலத்தினின்றும் எழுந்து மெல்ல நடந்துசென்று அவள் கூறிய அக்கூத்தப்பள்ளிக் குச்சரக்குடிசையில் சென்று புகுந்து ஆங்கிருந்த வாசவதத்தையை மானனீகை என்றே கையால் அணைக்க முயலலும் அவ்வாசவதத்தை இவன் செய்வதனைக் காண்பேம் என்று கருதியவளாய் மூங்கில்போலும் தோளையுடைய அத்தேவி அவனைத் தன் கையால் தடுத்தவளாய் மற்றொருபுறம் செல்லா நிற்ப என்க.
 
(விளக்கம்) நிகழ்ந்ததை - வாசவதத்தை மானனீகையைச் சிறைப்படுத்ததும் தானே அங்கிருத்தலும் ஆகிய இந் நிகழ்ச்சிகளை என்க. பிறர் அறியாமற் செல்ல வேண்டுதலின் மெல்ல நடந்து என்றார். வேந்தன் செய்வது காண்குவம் என்பது தேவியின் உட்கோள். காம் பேர் - மூங்கிலையொத்த. தோளி : வாசவதத்தை.