பக்கம் எண் :

பக்கம் எண்:818

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
           காம்பேர் தோளி கையி னீக்கலும்
    225    மான னீகைதா னூடின ளாகி
           மேவல ளாயினள் போலுமென் றெண்ணி
           முரசுமுழங்கு தானை யரசொடு வேண்டினும்
           தருகுவ லின்னே பருவர லொழியினி
           மானே தேனே மானனீ காயெனக்
    230    கானேர் பற்றத் தானது கொடாஅ
           துரைப்பது கேட்ப மறுத்தவ ளொதுங்கி
           நிலைப்படு காமந் தலைப்படத் தரியான்
 
                    (இதுவுமது)
            225 - 232 : மானனீகை.........தரியான்
 
(பொழிப்புரை) அஃதுணர்ந்த மன்னன் அம்மானனீகையே தன்பால் பிணங்கியவளாய்த் தன் கருத்திற்கு இணங்காளாயினள் போலும் என்று எண்ணி, ''மானே ! தேனே !! மானனீகாய்!!! ஏனிந்த ஊடல்? வெற்றிமுரசு முழங்குவதற்குக் காரணமான படைகளோடே எனது அரசுரிமையை நீ விரும்பினாலும் இப்பொழுதே தருகுவன்காண்! இனி நின் துயரம் யாதாயினும் ஒழிக'' என்று கூறி அவளது காலைப் பற்றுவான் தொடங்க; அது கேட்ட வாசவதத்தை பின்னரும் அம்மன்னவன் கூறுவதனைக் கேட்கும் பொருட்டு அவன் பற்றுதற்குக் காலுங் கொடாளாய் மறுத்துப் பின்னும் ஒதுங்கா நிற்பத் தன் நெஞ்சில் நிலையுதலுற்ற காமம் மிகுதலாலே அத்துன்பத்தைப் பொறானாய் என்க.
 
(விளக்கம்) அரசு - அரசுரிமை. இன்னே - இப்பொழுதே. பருவரல் - துன்பம். ஆர்வத்தால் மும்முறை விளித்தான். அம் மன்னன் பின்னும் உரைப்பதனைக் கேட்கும் பொருட்டு என்க. அவள் : வாசவதத்தை. ஒதுங்கி - ஒதுங்க. தரியான் - பொறான்.