பக்கம் எண் :

பக்கம் எண்:819

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
           புதுமை கூறியிவண் முகம்பெறு கேனென
           மதித்தன னாகி யொருமொழி கேளினி
    235    முகைக்கொடி முல்லை நகைத்திரு முகத்துத்
           தகைக்கொடி யனையோள் வாசவ தத்தை
           இயைந்த நெஞ்சுடை யாமிரு வர்க்கும்
           கழிந்த கங்குலி னிகழ்ந்ததை யெல்லாம்
           கனவது முந்திய வினைய தாதலின்
    240    அதனிற் கண்டெனக் கொளியா துரைப்ப
 
                    (இதுவுமது)
              233 - 240 : புதுமை.........உரைப்ப
 
(பொழிப்புரை) அதுகண்ட அவ்வுதயணன் யான் இவளுக்கு இப்பொழுது புதுமையுடைய ஒரு செய்தியைக் கூறி இவள் முகத்தைப் பெறுவேன் என்று கருதியவனாய் 'நங்காய்! யான் இப்பொழுது கூறும் ஒரு மொழியைக் கேட்பாயாக! கொடி முல்லையின் அரும்பை யொத்த பற்களையும், அழகிய முகத்தையும் உடைய அழகிய பூங்கொடி போன்றவளாகிய வாசவதத்தை காதலாற் கலந்த உள்ளமுடைய நம்மிருவர்க்கும் கழிந்த இரவின்கண் நிகழ்ந்த நிகழ்ச்சியெல்லாம் கனா முந்துறாத வினை இல்லை என்பவாகலின் தன் கனவிற் கண்டு அதனை எனக்கு ஒளியாமல் கூற,' என்க.
 
(விளக்கம்) முல்லைக் கொடிமுகை என்க. முகை - அரும்பு. நகை - பல். தகை - அழகு. காதலால் இயைந்த என்க. சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்தபின் சிலர்க்குக் கனவிற்றோன்றுதல் உண்டு என்னும் கொள்கையுண்மையால் இந்நிகழ்ச்சி அவள் கனவில் தோன்றலாயிற்றுப்போலும் என்றான் என்க. முந்திய வினையது கனவு என்க. 'இல்லை கனா முந்துறாத வினை' என்பது பழமொழி (2) அதனில் - அக் கனவில்.