உரை |
|
3. மகத காண்டம் |
|
6. பதுமாபதியைக் கண்டது |
|
வயப்பட லுற்று வயங்கிழை மாதர்
55 தானுங் கதுமென நேர்முக
நோக்க
நெஞ்சிறை கொளீஇய நிறையமை
நெடுந்தாழ்
வெந்தொழிற் காம வேட்கை
திறப்பத்
திண்பொறி கலங்கித் திறல்வே றாகி
வேலை
யெல்லை மீதூர்ந் திரண்டு 60
கோலப் பெருங்கடல் கூடி யாங்கும் |
|
(உதயணனும் பதுமாபதியும் தம்முள்
மயங்கல்) 54 - 60 :
வயப்படல்.........கூடியாங்கும் |
|
(பொழிப்புரை) வயப்பட்டு
விளங்காநின்ற அணிகலன்களையுடைய அப்பதுமாபதி தானும் அவன் நோக்கெதிர்
நோக்குதலானே தனது நெஞ்சின்கண் நெடுங்காலமாகத் தங்கிக்கிடந்த
நிறையாலே அமைந்த தாழக்கோலை அப்பொழுது தன்னெஞ் சிலே தோன்றிய
வெவ்விய செயலையுடைய காமவேட்கை திறவா நிற்பத் தனது திண்ணிய மெய்
முதலிய பொறிகள் நிலைகுலைந்து ஆற்றல்கெட இவ்வாற்றான் இரண்டு
அழகிய பெரிய கடல்கள் தமக்குரிய கரையாகிய எல்லையைக் கடந்து
பொங்கி ஒன்றாகக் கூடினாற்போலவும் என்க. |
|
(விளக்கம்) மறத்தகை
மன்னன் (45) நெடுங்கண் (53) வயப்பட்டு மாதர் நோக்க என்க.
தன்வயமிழந்து அக்கண்களாற் கவரப்பட்டு என்றவாறு. மாதர் - பதுமாபதி.
கதுமென - விரைவுக் குறிப்பு. இறைகொள்ளுதல் - நெடுங்காலந்
தங்குதல். பொறி - மெய் முதலியன. திறல் - தத்தமக்குரிய ஆற்றல். வேலை
- கடற்கரை. இரண்டு கடல் - இருவர் நெஞ்சமும். |