பக்கம் எண் :

பக்கம் எண்:826

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
         
    10    அறிந்து வேந்த னறிபயிர் காட்டப்
         பரிந்தன னாகிப் பட்டதை யுரைப்ப
         மற்றவ ளொருமயிர் கருவி தீண்டின்
         இற்ற தென்னுயி ரிதுநீ விலக்கென
         நிகழ்ந்த தென்னென நீகடைக் கூட்ட
    15   முடிந்த தென்ன மடந்தையர் விளையாட்
 
        (உதயணன் நிகழ்ந்ததை வயந்தகனுக்குக் கூறல்)
               10 - 15 : அறிந்து.........என்ன
 
(பொழிப்புரை) முன்னர்த் தனித்துச் சென்று ஒரு மண்டபத்திலிருந்த அவ்வேந்தன் வயந்தகன் தன்னைத் தேடுதலை அறிந்து தான் அவ்விடத்திருத்தலை அறிதற்குக் காரணமான அழைப்புக் குறிப்பொலியைக் காட்டாநிற்ப, இவ்வாற்றால் அவன் இருக்குமிடத்தை உணர்ந்துகொண்ட வயந்தகன் மானனீகைக்குப் பெரிதும் இரங்கியவனாய் ஆண்டு அவளுக்கு நிகழ்ந்த செய்தியைக் கூறா நிற்ப, அதுகேட்ட அரசன் ''அந்தோ! அம் மானனீகையின் கூந்தலில் ஒரேவொரு மயிரைக் கத்தரிகை தொட்டுவிட்டாலும் என் உயிரே போயிற்று! யான் என் செய்கோ ? நண்பனே! நீ விரைந்து சென்று இக்கொடுஞ்செயல் நிகழாவண்ணம் விலக்குவாயாக!'' என்று வேண்ட, அதுகேட்ட வயந்தகன் ''பெருமானே! பெருந்தேவி இவ்வாறு சினத்தற்குக் காரணம் யாது?'' என்று வினவா நிற்ப, அதுகேட்ட உதயணன் ''நண்பனே! நீ என்னைக் கடைக்கூட்டி விடுத்த செயலின் முடிவே இஃது,'' என்று கூற என்க.
 
(விளக்கம்) அறிந்து - தேடுதலை அறிந்து. வேந்தன் : உதயணன் அறிபயிர் - தன்னை அறிதற்குக் காரணமான அழைப்பைக் காட்டும் குறிப்பொலி. அவை ஓ, ஊ என்பன. மானனீகைக்குப் பரிந்தனனாகி என்க. பட்டதை - நிகழ்ந்ததை. அஃதாவது மானனீகையைக் கோமகள் ஒறுக்கப் புகுந்தமை. அவள் - அம்மானனீகை. கருவி என்றது கத்தரிகையை. இற்றது எனத் தெளிவின்கண் எதிர்காலம் இறந்தகாலமாயிற்று. இது - இக்கொடுஞ் செயலை. நீ கடைக்கூட்ட - நீ கூட்டி வைக்க. அதன் பயனாக இங்ஙனம் நிகழ்ந்தது. இஃது என் சொல்லியவாறோ எனின் நீ உலாப்போகும் என்னைப் போகாமல் தடுத்து மகளிர் பந்தாட்டம் காணச் செய்தமையால் வந்த வினையே இஃது என்றவாறு.