பக்கம் எண் :

பக்கம் எண்:827

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
         
    15     முடிந்த தென்ன மடந்தையர் விளையாட்
          டன்றியுங் கரவொடு சென்றவள் புதுநலம்
          கொண்டொளித் தருளக் கூறலு முண்டோ
          கொற்றத் தேவி செற்றந் தீர்க்கும்
          பெற்றிய ரெவரே யாயினும் பெயர்வுற்
    20    றாறேழ் நாழிகை விலக்குவ லத்துணை
          வேறொரு வரைநீ விடுத்தரு ளென்று
 
                (வயந்தகன் கூறல்)
           15 - 21 : மடந்தையர்..........என்று
 
(பொழிப்புரை) அதுகேட்ட வயந்தகன் ''பெருமானே! யான் அம்மகளிர் பந்து விளையாட்டைச் சென்று கண்டருள்க! என்று கூறியதேயன்றி நீ கள்ளத்தன்மையோடு சென்று அம்மானனீகையின் புத்தம் புதிய இன்பத்தையும் நுகர்ந்து இம்மண்டபத்திலே புகுந்து ஒளிந்தருளுக! என்றுங் கூறியது உண்டோ? அது கிடக்க, வெற்றிமிக்க அக்கோப்பெருந்தேவியின் சினத்தைத் தீர்க்கும் தன்மையுடையோர் இங்கு யாரே யுளர்? ஆயினும் யான் சென்று ஆறு ஏழு நாழிகை அக்கொடுஞ்செயல் நிகழா வண்ணம் தடுத்து வைப்பேன். அவ்வளவில் நீ மற்றொருவரை அங்கு விடுத்தருளுக!'' என்று கூறி என்க.
 
(விளக்கம்) நீ கடைக்கூட்ட நிகழ்ந்த வினை இஃது என்று கூறும் வேந்தனுக்கு வயந்தகன் கூறும் மறுமொழி பெரிதும் இன்பமுடைத்தாதல் உணர்க. தேவி : வாசவதத்தை. செற்றம் - சினம். பெற்றியர் - தன்மையுடையோர் எவரே என்னும் வினா ஒருவருமிலர் என்பதுபட நின்றது. ஆறேழ் நாழிகை என்பது ஒரு சிறிய கால அளவைக் குறித்து நின்றது. வேறொருவரை என்றது அதற்கு மேலும் அச்செயல் நிகழா வண்ணம் தடுத்தற்கு உரியவரை என்பதுபட நின்றது.