பக்கம் எண் :

பக்கம் எண்:830

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
          மற்றதற் கேற்ற வகைபல வுண்டவை
          பத்திக ளாகியும் விற்பூட் டாகியும்
          அணில்வரி யாகியு மான்புற மாகியும்
          மணியற லாகியும் வயப்புலி வரிபோல்
    35    ஒழுக்கத் தாகியு முயர்ந்துங் குழிந்தும்
          கழுக்கொழுக் காகியுங் காக்கையடி யாகியும்
          துடியுரு வாகியுஞ் சுழலா றாகியும்
          பணிவடி வாகியும் பாத்திவடி வாகியும்
          இருப்பவை பிறவுமா மெடுத்ததை யருளுநின்
    40    திருக்கர மலர்மயிர் தீண்ட றகாதால்
          ஒருகத் தரிகை தருகென வாங்கி
 
             (கத்தரிகைகளின் வகை)
            31 - 41 : மற்றதற்கு...........வாங்கி
 
(பொழிப்புரை) அக்கட்டளை பெற்ற வயந்தகன் (அச்செயல் நிகழாமல் தடுத்தற்கோ ருபாயமாக வறுமொழி பல பேசத் தொடங்கி) ''தேவீ! அங்ஙனம் கூந்தலைக் கொய்தற்கு ஏற்ற கத்தரிகை வகைகள் பற்பல உண்டு. அவையிற்றைக் கூறுவேன் கேட்டருள்க. அக்கத்தரிகைகள் தாம் வரிசை வரிசையாகவும், விற்பூட்டுப் போலவும், அணில் வரிகள் போலவும், மானினது முதுகு போலவும், மணிகள் போன்று அறல் பட்டனவும், வலிய புலியின்கண் அமைந்த வரிகளைப்போல ஒழுங்குடையன ஆகியும், உயர்ந்தும், குழிந்தும், கழுகினது நடைபோலவும், காக்கைக் கால்போலவும், உடுக்கைபோன்ற உருவுடையதும் சுற்றும் தன்மையுடையனவும் பாம்பின் வடிவுடையதாகவும் பகுத்த வடிவினதாகியும் பல்வேறு வடிவினை உடையனவாக இருப்பனவும் பிறவுமாம்'' என்று கூறித் ''தேவியின் அருள் செய்தற்குரிய திருக்கைமலர் இவளின் கூந்தலைத் தொடுதல் தகாது'' என்று கூறி அவள் தன் கையிலெடுத்த கத்தரிகையை ''எனக்கு ஒரு கத்தரிகை வழங்குக!'' என்று கூறி வாங்கி என்க.
 
(விளக்கம்) இங்கு வயந்தகன் கத்தரிகைகளின் வகைகளைக் கூறுபவன்போலப் பொருளற்ற சொற்களை நிரல் நிரலாக அடுக்கிக் கொண்டே போகின்றான். பொருளுணரமாட்டாத சொற்களைக் கூறுதலாலே அத்தேவியும் மயங்கி இப்படியெல்லாம் கத்தரிகைகள் இருக்கும்போலும் என்று நினைக்கும்படி கூறுகின்றான் என்க. ''இரவலர்க்கு அருளும் நின் கரமலர் இவ்வெளியவள் கூந்தலைத் தீண்டல் தகாது. ஆதலால் என்பால் ஒரு கத்தரிகை தருக'' என்று கூறி அத்தேவி கையிலெடுத்த கத்தரிகையை வாங்கிக் கொண்டு என்க.