பக்கம் எண் :

பக்கம் எண்:831

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
          ஒருபுல் லெடுத்தன னதனள வறியா
          நான்மையின் மடித்தொரு பாதி கொண்டதன்
          காதள வறிந்தணி யாணியும் பிறவும்
    45    மதிப்பொடு பல்காற் புரட்டின னோக்கி
          எடுத்திரு கையுஞ் செவித்தலம் புதையாக்
          கண்சிம் புளியாத் தன்றலை பனித்திட்
 
               (வயந்தகன் செயல்)
            42 - 47 : ஒரு............பனித்திட்டு
 
(பொழிப்புரை) அவ் வயந்தகன் அங்குக் கிடந்த ஒரு புல்லை எடுத்து அக் கத்தரிகையை அளந்து அதன் அளவை அறிந்து பின்னர் அப் புல்லை நான்காக மடித்து அம் மடிப்பில் ஒரு
பாதியை எடுத்து அக் கத்தரிகையின் காதின் அளவினை அளந்தறிந்து பின்னர் அக் கத்தரிகையை நன்கு மதிப்பவன்போல நடித்துப் பன்முறையும் அதனைப்புரட்டிப் புரட்டி அதன் ஆணியும் பிறவும் ஆகிய உறுப்புக்களை நோக்கியவனாயப் பின்னர்த் தன் இரு கைகளையும் எடுத்துத் தன் இரு செவிகளையும் பொத்திக்கொண்டு கண்களைச் சுருக்கிக்கொண்டு தன் தலையை நடுக்கி என்க.
 
(விளக்கம்) புல் - துரும்பு. அறியா - அறிந்து. நான்மையின் - நான்காக. ஒரு பாதி - இரண்டு மடிப்பு. காது - கத்தரிகையின் ஓர் உறுப்பு. ஆணி - இதுவுமது. மதிப்பொடு - அக்கத்தரிகையை நன்கு மதிப்பவனைப்போல புதையா - புதைத்து. சிம்புளியா - சிம்புளித்து, சுருக்கி, பனித்திட்டு - நடுக்கி.