பக்கம் எண் :

பக்கம் எண்:832

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
          டிங்கித னிலக்கண மெளிதோ கேளினி
          நீர்மையுங் கூர்மையு நெடுமையுங் குறுமையும்
    50    சீர்மையுஞ் சிறப்புஞ் செறிந்துவனப் பெய்திப்
          பூத்தொழின் மருவியது புகர்வயி னணைந்தோர்க்
          காக்கஞ் செய்யு மணங்கொடு மருவிய
          இலக்கண முடைத்தீ திவண்மயிர் தீண்டின்
          நலத்தகு மாதர்க்கு நன்றா மதனால்
    55    மற்றொன் றுளதேற் பொற்றொடி யருணீ
          இத்தகைத் தீதென வெடுத்தன னெறிய
 
               (வயந்தகன் கூறுதல்)
            48 - 56 : இங்கிதன்.........எறிய
 
(பொழிப்புரை) ''தேவீ! கேட்டருள்க! இக் கத்தரிகையின் இலக்கணம் கூறுதற்கு எளியதொன்றன்று. இதுதானும் நீர்மையும் கூர்மையும் நெடுமையும் குறுமையும் சீர்மையும் சிறப்பும் ஆகிய உயர்ந்த பண்புகள் நிறையப்பெற்று அழகெய்திப் பூத்தொழில் பொருந்தியது. ஆதலால் இது குற்றத்தின்கண் எய்தியவர்களுக்கு நன்மையே செய்யும் ஒரு தெய்வத்தோடு தொடர்பு பட்ட நல்லிலணக்கமுடையது. ஆதலின் இக் கத்தரிகையால் இவள் கூந்தலைக் கொய்தால் அழகுமிக்க இவளுக்கு மேலும் நன்மையேயுண்டாகும். ஆதலால் வேறொரு கத்தரிகை உளதாயின் எம்பெருமாட்டி அதனை வரவழைத்துத் தந்தருள்க. இக்கத்தரிகை இத்தகைய தெய்வத் தன்மையுடையது என்று அதனைக் கையிலெடுத்து எறியாநிற்ப என்க.
 
(விளக்கம்) இதன் கண்ணும் வயந்தகன் பொருளில் வறுஞ் சொற்களையே பொருளுடையனபோலப் பேசுகின்றான் ஆதல் உணர்க. ஆக்கஞ்செய்யும் அணங்கொடு - நலஞ்செய்யும் ஒரு தெய்வத்தோடு. இவள் - இம்மானனீகை. மாதர்க்கு : இவளுக்கு. பொற்றொடி ஈது - இக்கத்தரிகை ; இத்தன்மைத்து என்க.