உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
கற்றறி வித்தகன் பொற்பணி வெண்பூக்
65 கோவைத் தந்த மேவரச்
சேர்த்திக் கூறை
கீறிச் சூழ்வர வுடீஇ
நீறுமெய் பூசி நெடிய
மயிர்களை வேறுவே
றாகும் விரகுளி
முடித்துக் கண்டோர்
வெருவக் கண்மல ரடக்கம் 70 கொண்டோ
னாகிக் குறியறி
யாமற் கைத்தல
மொத்தாக் கயிட படை
கொட்டிப் பித்த
ருருவிற் றுட்கெனத் தோன்றலும்
|
|
(யூகி பித்தர் வேடம்
தரித்தல்) 64 -
72 : கற்றறி............தோன்றலும்
|
|
(பொழிப்புரை) பல நூல்களையும் கற்றுணர்ந்த கலைஞனாகிய அந்த
யூகி பொன்னணிகலன்களையும் வெள்ளிய யானைக் கோட்டால் இயற்றிய மலர்க்கோவையையும்
பொருந்துதலுண்டாக அணிந்துகொண்டு ஆடையைக் கிழித்துக் கிழித்து அரையைச் சுற்றிச்
சுற்றி உடுத்து உடல் நிரம்ப வெண்ணீறு பூசித் தனது நெடிய தலைமயிர்களைப் பல்வேறு
வகையாகத் தந்திரமாக முடித்துக்கொண்டு தன்னைக் கண்டோர் அஞ்சும்படி மலர்போன்ற தன்
கண்களை மூடிக் கொண்டு குறிப்பொன்றுமில்லாமல் கைகளைத் தட்டி கயிடபடை (?) கொட்டிப்
பித்தர் வடிவத்தில் ஞெரேலென வாசவதத்தை மாளிகையின்கட் புகாநிற்ப
என்க
|
|
(விளக்கம்) வித்தகன் - கலைஞன் ; யூகி, பொற்பணி - பொன்னணிகலம். வெண்பூக் கோவைத் தந்தம் -
யானைக்கொம்பிற் கடைந்த மலர்க்கோவை. கூறை - ஆடை. கீறி - கிழித்து. நீறு -
சாம்பல். விரகுளி - தந்திரமாக. கண்மலர் அடக்கங்கொண்டு - கண்களை மூடிக்கொண்டு.
ஒத்தா - ஒத்தி. கயிடபடை கொட்டி - இதன் பொருள் விளங்கவில்லை. துட்கென : விரைவுக்
குறிப்பு. வாசவதத்தை மாளிகையின்கண் வந்து தோன்றலும்
என்க.
|