பக்கம் எண் :

பக்கம் எண்:836

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
           ஏழை மாதரைச் சூழ்வர நின்ற
           பாவையர் பலரும் பயந்திரிந் தோடி
    75     விழுநரு மெழுநரு மேல்வர நடுங்கி
           அழுநருந் தேவிபின் பணைநரு மாகத்
           தேன்றேர் கூந்த றானது நோக்கி
           மேன்மே னகைவர விரும்பின ணிற்ப
 
        (தோழியர் யூகியின் வேடத்தைக் கண்டு ஓடுதல்)
                 73 - 78 : ஏழை............நிற்ப்
 
(பொழிப்புரை) எளிய மானனீகையைச் சூழ்ந்து நின்ற தோழிமார் பலரும் அந்த யூகியைக் கண்டு அஞ்சிக் கொட்டேடி விழுவாரும், எழுந்து நோக்குவாரும், பின்னரும் அப் பித்தன் தம்மை அணுகி வரக்கண்டு உடல் நடுங்கி அழுவாரும் கோப்பெருந்தேவியின் பின்சென்று அணைவாரும்ஆக வண்டுகள் தேனாராய்கின்ற கூந்தலையுடைய அக் கோப்பெருந்தேவி அந்நிகழ்ச்சியை நோக்கி மேலும்மேலும் தனக்கு நகைப்பே தோன்றுதலின் பின்னரும் அக் காட்சியைக் காண விரும்பி நிற்ப என்க.
 
(விளக்கம்) தண்டனைக்குள்ளாயிருத்தல் பற்றி மானனீகையை ஏழை மாதர் என்றார். பாவையர் - தோழிமார் முதலியோர். இரிந்து ஓடி - புறங்கொடுத்து ஓடி. தேவி - வாசவதத்தை. தேன் - வண்டு. வண்டு தேனைத் தேருங் கூந்தல் என்க. கூந்தல் - வாசவதத்தை. அது - அந்நிகழ்ச்சியை.