| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 14. மணம் படு காதை |
| |
புதுமான் விழியிற் புரிகுழற் செவ்வாய்ப்
பதுமா பதியை வருகெனக் கூஉய்
வில்லேர் நுதல்வர வேந்தன் சென்றெதிர்
புல்லினன் கொண்டு மெல்லென விருந்தொன்
85 றுரைப்ப வெண்ணி மறுத்துரை யானாய்த்
திகைப்ப வாயிழை கருத்தறிந் தனளாய்
|
| |
(உதயணன் பதுமாபதியை வருவித்தல்)
81 - 86 : புதுமான்............திகைப்ப |
| |
| (பொழிப்புரை) அச்சிலதி மொழிகேட்ட மன்னவன், புதுவதாக வந்த மான்போல மருளும் விழிகளையும் பின்னிய கூந்தலையும் சிவந்த வாயையுமுடைய பதுமாபதியை வருமாறு அழைத்தலால் வில்போன்ற நுதலையுடைய அந்நங்கை வாரா நிற்ப, அவள் வரவுகண்ட அரசன் அவள் எதிரே சென்று தழுவி அழைத்துக் கொணர்ந்து மெல்லென ஓர் இருக்கையில் அவளோடிருந்து அவளை நோக்கி ஒரு காரியத்தைக் கூற நினைந்து மீண்டும் கூறமாட்டானாய்த் திகையாநிற்ப என்க. |
| |
| (விளக்கம்) தான் பழகிய இடத்தினின்றும் புதிய இடம் புகுந்த மான் மிகவும் மருண்டு நோக்குதல் இயல்பாகலின் புதுமான்விழி என்றார். கூஉய் - அழைத்து. எதிர்சென்று புல்லினன் என்க. மெல்லென அவளோடு இருந்து என்க. ஒன்று - ஒரு காரியத்தை. என்றது மானனீகைக்கும் தனக்கும் உண்டான தொடர்பைக் கூறத் தொடங்கியவன் நாணத்தால் கூறாது திகைத்தான் என்பது கருத்து. |