பக்கம் எண் :

பக்கம் எண்:84

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           நன்னகர் கொண்ட தன்னமர் விழவினுட
           கரும்புடைச் செல்வன் விரும்புபு தோன்றித்
           தன்னலங் கதுமெனக் காட்டி யென்னகத்
     70    திருநிறை யளத்தல் கருதிய தொன்றுகொல்
           அந்தண வடிவொடு வந்திவட் டோன்றி
           மேவன நுகர்தற்கு மாயையி னிழிதரும்
           தேவ குமரன் கொல்லிவன் றெரியேன்
           யாவ னாயினு மாக மற்றென்
     75    காவ னெஞ்சங் கட்டழித் தனனென
           வெஞ்சின விடலையொடு நெஞ்சுமா றாடி
 
        (பதுமாபதி நினைத்தல்)
      67 - 76 ; நன்னகர்.........மாறாடி,
 
(பொழிப்புரை) ஒன்று, நல்ல நகரமாகிய இவ்விராசகிரியத்து
  மாந்தர் மேற்கொண்ட தன்னை விரும்புதற்குக் காரணமான
  இத்திருவிழாவின்கண் கரும்பு வில்லுடைய செல்வனாகிய காமதேவன்
  தான், பெரிதும் விரும்பி உருவங்கொண்டு பலரும் காணத்தோன்றித்
  தன்னுடைய பேரழகினை எனக்குக் காட்டி என்னெஞ்சத்தின் பெரிய
  நிறையை அளக்கக் கருதிய கருத்தாலோ? அல்லது பார்ப்பன
  வடிவத்தோடுவந்து இங்குத் தான் விரும்பும் இன்பங்களை நுகர்தற்கு
  மாயைஉயினாலே இங்ஙனம் மானிட வடிவங்கொண்டு வந்ததொரு
  தேவகுமரனோ? இவருள் இவன் தான் யாவன்? என்று யான்
  அறிகின்றிலேன். இவன் யாவனேமாயினும் ஆகுக! இவன் காவலுடைய
  என்னெஞ்சின் கட்டுப்பாட்டை அழித்துவிட்டனன் என்று வெவ்விய
  வெகுளியையுடைய பெருமகனாகிய உதயணன் நெஞ்சில் தானும்
  தன்னெஞ்சில் அவனுமாக மாறி இருவரும் ஒருவர் நெஞ்சில் ஒருவர்
  புகுந்து என்க.
 
(விளக்கம்) நன்னகர் - ஆகுபெயர். தன்அமர் - தன்னை
  விரும்பும் -  கரும்புடைச் செல்வன்-காமவேள், விரும்பு-விரும்பி.
  இருநிறை. பெரிய நிறை. ஒன்று காமவேள் என்னிறையளத்தற்கு
  இங்ஙனம் மானிட வடிவங்கொண்டு வந்தனனோ? அல்லது தேவகுமரன
  ஒருவன் இங்குள்ள இன்பங்கள் நுகர எண்ணி மனிதனாய் இங்ஙனம்
  வந்தனனோ? என்று ஐயுற்றபடியாம். மேவன-விரும்புவன.
  மாயை-இந்திரசாலம்- இதனோடு ''யாவனே யானுமாக வருநிறைக்
  கதவநீக்கிக், காவலென்னெஞ்ச மென்னுங் கன்னிமாடம் புகுந்து, 
  நோவவென்னுள்ளம் யாத்தாய்'' எனவரும் சீவக சிந்தாமணியை (714)
  ஒப்புநோக்குக. நெஞ்சு மாறாடல்- ஒருவர் நெஞ்சில் ஒருவர் புகுதல்
  ''வரிசிலை யண்ணலும் வாட்க ணங்கையும், இருவரு மாறிப் புக் கிதய
  மெய்தினார்'' என்றார் கம்பநாடரும். (மிதிலைக். 37)