பக்கம் எண் :

பக்கம் எண்:840

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
          முறுவல்கொண் டெழுந்து முன்போந் தாயிழை
          தகும்பதந் தாழத் தானவட் கறியப்
    95    புகுந்ததை யுணர்த்த வருந்திவள் பொருளாச்
          சீறி யருளுதல் சிறுமை யுடைத்திது
          வீறுயர் மடந்தாய் வேண்டா செய்தனை
          அன்புடைக் கணவ ரழிதகச் செயினும்
          பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை
    100   அறியார் போலச் சிறியோர் தேஎத்துக்
          குறைகண் டருளுதல் கூடா தன்றியும்
          பெற்றேன் யானிப் பிழைமறந் தருளென
          மற்றவள் பின்னரும் வணங்கின ணிற்பக்
 
           (பதுமாபதி வாசவதத்தையை வேண்டிக்கொள்ளல்)
                 93 - 103 : முறுவல்............நிற்ப
 
(பொழிப்புரை) அது கேட்ட பதுமாபதி புன்முறுவல் கொண்டவளாய் அவ்விடத்தினின்றும் எழுந்து சென்று வாசவதத்தையினது யாவரானும் தொழத்தகுந்த திருவடியின்கண் தாழ்ந்து வணங்கி எழுந்து நிற்ப, அக்கோப்பெருந்தேவி அப்பதுமாபதிக்கு விளக்கமாக அங்கு நிகழ்ந்த செய்திகளை உணர்த்தினளாக, அதுகேட்ட பதுமாபதி, "பெரியோய் ! இயல்பாகவே பணித்தொழில்புரிந்து வருந்திக்கிடக்கும் இவ்வண்ணமகளைத் தேவி ஒரு பொருளாக மதித்து இங்ஙனம் சினந்தருளுதல் தேவியின் பெருமைக்கு இழுக்கும் தருவதாம். வீறுபெற்று உயர்ந்த மடந்தையே ! இப்பொழுது நீ தகாததொன்றனைச் செய்தாயாகின்றாய். நம்போன்று பெண்ணாகப் பிறந்தவர்களுக்குத் தம் அன்புடைய கணவர் நோதக்க செய்யினும் பொறுத்துக் கோடலே பெருமையாகும். பெருமாட்டியாகிய நீயும் அறிவிலாதார் போன்று சிறியோரிடத்து இங்ஙனம் குற்றங் கண்டருளுதல் நின் பெருந்தகைமைக்குப் பொருந்தாததொன்றாகும். யான் நின்பால் ஒரு வரம் கேட்கின்றேன். என்பொருட்டு இவள் செய்த பிழையை மறந்து அருளுக !" என்று அப்பதுமாபதி மீண்டும் அவள் அடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து நிற்ப என்க.
 
(விளக்கம்) ஆயிழை : வாசவதத்தை. தகும்பதம் - யாரானும் தொழத்தகும் அடிகள். "உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்" என்பதுபற்றி (சிலப். பதி. 56) தகும் பதம் தாழ என்றார். அவட்கு : பதுமாபதிக்கு. வருந்தியவள் : வினைத்தொகை. வீறு - வேறொருவர்க்கில்லாத சிறப்பு. வேண்டா - தகாத. அழிதக - வருந்துதற்குக் காரணமான செயல்களை. அன்புடைக் கணவர் அழிதகச் செயினும் பெண் பிறந்தோர்க்குப் பொறையே பெருமை எனவரும் இத்தொடரோடு, "தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார், இகழினுங் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்" எனவரும் பரிபாடலையும் (20 : 88-9 ; "மாயமகிழ்நன் பரத்தைமை, நோவேன் றோழி கடனமக்கெனவே" எனவரும் கலியினையும் (75 : 32 - 3) நினைக. சிறியோர் தேஎத்து என்புழி, தேஎம் ஏழாவதனுருபு. குறை - குற்றம். வரம் பெறுவேன் எனல் வேண்டிய எதிர்காலம் தெளிவுபற்றிப் பெற்றேன் என இறந்தகாலத்திற் கூறப்பட்டது. யான் நின்பால் ஒரு வரம் பெறுவேன். அஃதாவது இப்பிழையை மறத்தல் என்றவாறு; மற்றவள் - அப்பதுமாபதி. இப்பகுதியில் பதுமாபதியின் மொழிகள் மிக இன்பம் தருதலுணர்க.