பக்கம் எண் :

பக்கம் எண்:847

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
         இருந்ததுங் கேட்டேன் வசுந்தரி மகளெனப்
         பயந்த நாளொடு பட்டதை யுணர்த்தாள்
   130    தன்பெயர் கரந்து மான னீகையென்
         றங்கொரு பெயர்கொண் டிருந்ததுங் கேட்டேன்
         அன்புடை மடந்தை தங்கையை நாடி
         எய்திய துயர்தீர்த் தியான்வரு காறும்
         மைய லொழிக்க தைய றான்மற்
   135    றிதுவென் குறையென வெழுதிய வாசகம்
 
                  (இதுவுமது)
          128 - 135 : வசுந்தரி............வாசகம்
 
(பொழிப்புரை) "மேலும் அவள்தானும் வசுந்தரி மகள் என்று உலகம் கூறும் அவளை நின் சிற்றன்னை ஈன்ற நாள் தொடங்கி உண்டான முறைப் பெயரையும் கூறாளாய், யாங்கள் அவளுக்கிட்ட வாசவதத்தை என்னும் இயற்பெயரையும் மறைத்துக்கொண்டு அவ்விடத்தே ''மானனீகை'' என்று ஒரு புனைபெயரையும் மேற்கொண்டு இருந்ததனையும் கேள்வியுற்றேன்; அன்பு மிக்க நங்காய்! நின் தங்கையாகிய அவ் வாசவதத்தையை (அம்மானனீகையை) நீ ஆராய்ந்து தெரிந்துகொண்டு அவள் எய்திய துன்பத்தையும் துடைத்து அவளை அழைத்துப்போக யான் நின் அரண்மனைக்கு வருந்துணையும் அவள் மயக்கத்தை ஒழித்தருளுக ! தையால் ! இதுவே என் வேண்டுகோளாம்," என்று எழுதி இருந்த மொழிகளை, என்க.
 
(விளக்கம்) வசுந்தரி - கோசலத்தரசன் மனைவி; மானனீகையின் தாய்; வாசவதத்தைக்குச் சிற்றன்னை. பயந்த நாளொடு பட்டதை - அவளை அவள் தாய் ஈன்றநாள் தொடங்கி உண்டான ''வசுந்தரி மகள்'' என்னும் முறைப் பெயரையும் உணர்த்தாளாய் என்க. அவள் முன்பு வசுந்தரியின் சேடி என்று பாதிப் பொய்யும் பாதி மெய்யுமாகக் கூறியதனையும் (13. 37 - 38) ஈண்டு நினைக. தன்பெயர் - அவள் இயற்பெயராகிய வாசவதத்தை. இதனால் வாசவதத்தையின் சிற்றன்னை தன் மகளுக்கும் அன்பு காரணமாக இவ்வாசவதத்தையின் பெயரையே இட்டிருந்தாள் என்பது உணரப்படும். மடந்தை : விளி. மையல் - மயக்கம். தையல் : விளி. குறை - வேண்டுகோள்.