பக்கம் எண் :

பக்கம் எண்:851

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
         தழீஇக் கொண்டு தானெதி ரிருந்து
         தண்ணென் கூந்த றன்கையி னாற்றிப்
         பண்ணிய நறுநெயு மெண்ணெயும் பெய்து
   160    நறுநீ ராட்டிச் செறிதுகி லுடீஇப்
         பதுமையுந் தானு மினியன கூறிப்
         பொருவில் பக்கத்துப் பொற்கல மேற்றி
         வருகென மூவரு மொருகலத் தயில
 
          (மானனீகையை வாசவதத்தை அலங்கரித்தல்)
               157 - 163 : தழீஇ...............அயில
 
(பொழிப்புரை) மானனீகையைக் கைகளாலே அணைத்துக் கொடுபோய் இருத்தி வாசவதத்தை தானே அவள் எதிரிலிருந்து குளிர்ந்த அவளது கூந்தலைத் தன் கையினாலே ஆற்றி மணப்பொருளிட்டுப் பண்ணுறுத்திய நறிய நெய்யினையும் எண்ணெயினையும் அக் கூந்தலிற் பெய்து நறிய நீரால் ஆட்டிப் பின்னர் அவள் இடையில் பொருந்தும்படி ஆடையை உடுத்து அலங்காரம் செய்து பதுமாபதியும் தானுமாக அவள் பக்கங்களிலே இருந்து இனிய மொழிகள் பல பேசி ஒப்பற்ற சுவை அடிசிலைப் பொற்கலத்தே எடுத்து வருக ! என வருவித்துக் கொண்டு அம் மூவரும் ஒரே கலத்தின்கண் உண்ணாநிற்க என்க.
 
(விளக்கம்) தான் : வாசவதத்தை. பண்ணிய - மணங்கூட்டி இயற்றிய. உடீஇ - உடுத்து. இனியன - கேட்டற்கு இனியவாகிய மொழிகள். பக்கத்து இருந்து எனவும், பொருவில் அடிசில் எனவும் வருவித்துக்கொள்க. மூவரும் - வாசவதத்தை பதுமாபதி மானனீகை என்னும் இம்மூவரும் என்க. கலம் - உண்கலம். அயில - உண்ண.