| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 14. மணம் படு காதை |
| |
முகிறோய்
மாமதி புகர்நீங்
கியதெனத் திருமுக
மலர முறுவல்கொண்
டெழுந்து வருகெனத்
தழீஇ முகமன் கூறி
ஒருபுட் பெற்றே னெருந லினிதென
|
| |
(உதயணன்
மகிழ்தல்)
166 - 169 : முகில்............இனிதென
|
| |
| (பொழிப்புரை) அது கேட்ட அவ்வுதயணன் முகிலுள் மூழ்கிய நிறைத் திங்கள் அம் முகிலும் களங்கமும்
நீங்கிப்பொலிந்தாற்போன்று தனது திருமுகம் துயர் நீங்கி மலரும்படி புன்முறுவல்கொண்டு
இருக்கையினின்றும் எழுந்து இந் நற்செய்தி கொணர்ந்த வயந்தகனை "வருக! வருக!" என்று
வரவேற்று முகமன் மொழிகள் பல கூறி, "நண்பனே! யான் நெருநல் ஒரு நற்சொல் கேட்டேன்.
அந் நன்னிமித்தம் இங்ஙனம் நலங்கூட்டியது போலும்" என்று கூறாநிற்ப
என்க.
|
| |
| (விளக்கம்) உதயணனின் துன்பம் தோய்ந்திருந்த முகம் இது
கேட்டவுடன் அத் துன்பம் நீங்கிப் பொலிந்தது என்பதற்கு உவமையாக முகில் தோய்மதி
என்றும், தான் காதலித்த நங்கை பணிமகள் அல்லள் அரசமகள் என்று அறிந்தவுடன் அவன்
நெஞ்சத்திலிருந்த வசை நினைவு நீங்குதலின் புகர் நீங்கியது என்றார். எனவே முகில்
தோய்ந்திருந்த மதி அம்முகிலும் தன் களங்கமும் நீங்கிப் பொலிந்தாற் போல
என்றாராயிற்று. ஒரு புள் - ஒரு நற்சொல். அச் சொல்லின் பயனே இஃதென்று
மகிழ்ந்தபடியாம்.
|