பக்கம் எண் :

பக்கம் எண்:855

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
           பிணைமலர்த் தொடையற் பெருமக னவ்வயிற்
   175      பணைநிலைப் பிடிமிசைப் பலர்வரச் சாற்றி
           விரைபரித் தேரொடு படைமிடைந் தார்ப்ப
           முரசுமுழங்கு முற்றத் தரசுவந் திறைகொளக்
           கோலத் தேவியர் மேவினர் கொடுப்ப
           ஓவிய ருட்கு முருவியை யுதயணன்
   180      நான்மறை யாளர் நன்மணங் காட்டத்
           தீவலஞ் செய்து கூடிய பின்றை
 
                    (இதுவுமது)
            174 - 181 : பிணை............பின்றை
 
(பொழிப்புரை) அது கேட்டலும் பிணைத்த மலர்மாலையணிந்த உதயணமன்னன் அப்பொழுது பரிய உடலினையுடைய பிடி யானையின்மேல் தன் கேளிர்பலர் வருமாறு கூறாநிற்ப; மன்னர்களாகிய அந் நண்பர்கள் விரைந்து செல்லும் குதிரையையுடைய தேர்களோடும் தம் படை மறவர்கள் நெருங்கி ஆரவாரியா நிற்பப் பிடியின் மேலேறி வெற்றி முரசும் முழங்கும் அரண்மனை முற்றத்தின்கண் வந்து தங்காநிற்பவும், அழகிய பெருந்தேவிமாராகிய வாசவதத்தையும் பதுமாபதியும் பெரிதும் விரும்பி மானனீகையைத் தனக்கு வழங்காநிற்பவும், ஓவியரும் அஞ்சுதற்குக் காரணமான பேரழகுடைய அந்த மானனீகையை உதயண மன்னன் நான்கு மறைகளையும் ஓதியுணர்ந்த அந்தணர்கள் நல்ல மணச் சடங்குகளை முன்னின்று காட்டாநிற்பவும் அம்மானனீகையோடு தீவலம் செய்து அவளைக் கூடிய பின்னர் என்க.
 
(விளக்கம்) பெருமகன் : உதயணன். பணை நிலை - பருத்த நிலைமை. சாற்றி - சாற்ற. அரசு - கேளிராகிய அரசர்கள். தேவியர் : வாசவதத்தையும் பதுமாபதியும். இத்தேவிமார் இருவருமே மானனீகைக்குத் தாயும் தந்தையுமாகி அவளைத் தனக்கு வழங்க என்பது கருத்து. உருவி - அழகி. ஓவியர் இவளழகு நம்மால் எழுத வியலாத தென்று உட்குவர் என்றவாறு. உட்குதல் - அஞ்சுதல்.