(பொழிப்புரை) தொழிற்றிறன் முற்றிய அணிகலன்களையுடைய தேவிமார் மூவரும் வழிபடாநிற்பவும்,
வெற்றியுடைய அரசர்கள் உயர்ந்த திறைப் பொருளைக் கொணர்ந்து அளப்பவும், நாட்டின்கண்
நல்ல வளத்தைச் செய்கின்ற பல்வேறு குடிமக்களும் தழைத்தோங்கா நிற்பவும், செல்வமிக்க
வேந்தனாகிய அவ்வுதயணன் செங்கோல் செலுத்தி மேலும் மேலும் தானம் செய்தலின்கண்
விருப்பம் மிகாநிற்பவும், இவ்வாற்றால் அந் நாட்டின்கண் தீயன பலவற்றையும் அகற்றி
இடையறாது நல்லொழுக்கின்கண் நிற்பானாயினன் என்க.