பக்கம் எண் :

பக்கம் எண்:857

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          ஆனா தொழுகுங் காலை மேனாள்
          இலைசேர் புறவி னிலாவா ணத்தயற்
          கலைசேர் கானத்துக் கலந்துட னாடிய
          காலத் தொருநாட் சீலத் திறந்த
     5    சீரை யுடுக்கை வார்வளர் புன்சடை
          ஏதமில் காட்சித் தாபதன் மடமகள்
          பூவிரிந் தன்ன போதமர் தடங்கண்
          வீழ்ந்தொளி திகழும் விழுக்கொடி மூக்கிற்
          றிருவிற் புருவத்துத் தேன்பொதி செவ்வாய்
    10     விரிசிகை யென்னும் விளங்கிழைக் குறுமகள்
 
               (விரிசிகையின் இயல்பு)
             1 - 10 : ஆனாது..........குறுமகள்
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயண மன்னன் நன்னெறிக் கண் நின்று இடையறா தொழுகுங்காலத்தே பண்டு அவ்வுதயண மன்னன் இலாவாணக நகரத்தின்கண் அரசு வீற்றிருந்தபொழுது, மரங்கள் அடர்ந்த முல்லை நிலத்தின்கண் கலைமானும் பிணைமானும் சேர்ந்த காட்டின்கண் வாசவதத்தையோடும் பரிவாரங்களோடும் சென்று உண்டாட்டு நிகழ்த்திய காலத்தே ஒரு நாள் தவ ஒழுக்கத்தின்கண் மிக்கவனும் மரவுரியினையும் நீண்டு வளர்ந்த புல்லிய சடையினையும் குற்றமற்ற நற்காட்சியினையும் உடைய ஒரு துறவியின் மடப்பமுடைய மகளும், கருங்குவளை மலர் மலர்ந்தாற்போன்ற பெரிய விழிகளையும் ஒழுகினாற்போன்று நீண்டு ஒளியினாற் றிகழா நின்ற சிறந்த கொடிபோன்ற மூக்கினையும், அழகிய வில்லையொத்த புருவங்களையும், தேன் பொதிந்து வைத்தாற் போன்ற இனிய மொழிகளையுடைய சிவந்த வாயையும், விளங்கிய அணிகலங்களையுமுடைய பேதைப் பருவத்தாளும் ஆகிய ''விரிசிகை'' என்னும் ஒரு சிறுமி என்க.
 
(விளக்கம்) மேனாள் என்றது உதயணன் இலாவாணக நகரத்தின்கண் அரசு வீற்றிருந்த காலத்தை. இலை : ஆகுபெயர். மரம் என்க. புறவு - முல்லை நிலம். கலை - ஆண்மான். இனம் பற்றிப் பிணை மானுங் கொள்க. வாசவதத்தையுடன் கலந்து ஆடிய காலத்து என்க. சீலம் - ஒழுக்கம். இறந்த - மிகுந்த. சீரை - மரவுரி. ஏதம் - குற்றம். காட்சி - நற்காட்சி. தாபதன் - துறவி. போதமர் தடங்கண் என்புழிப் போதமர் உவமையின்றி வாளா அடைமாத்திரை. தேன் மொழிக்குவமை. விரிசிகை என்னும் இவளைப் பற்றி இலாவாண காண்டத்தில் 15 ஆவது விரிசிகை மாலை சூட்டு என்னும் காதையின்கண் விரிவாக உணர்க.