பக்கம் எண் :

பக்கம் எண்:858

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          அறிவ தறியாப் பருவ நீங்கிச்
          செறிவொடு புணர்ந்த செவ்விய ளாதலிற்
          பெருமகன் சூட்டிய பிணைய லல்லது
          திருமுகஞ் சுடரப் பூப்பிறி தணியாள்
    15    உரிமை கொண்டன ளொழுகுவ தெல்லாம்
          தரும நெஞ்சத்துத் தவம்புரி தந்தை
          தெரிவன னுணர்ந்து விரைவனன் போந்து
 
                   (இதுவுமது)
             11 - 17 : அறிவது.........உணர்ந்து
 
(பொழிப்புரை) தான் அறிதற்குரிய பொருளை அறியமாட்டாத பேதைப்பருவம் நீங்கி முதுக்குறைவோடு சேர்ந்த பெதும்பைப் பருவத்தை எய்தினாளாதலின் கழிந்த அப்பேதைப் பருவத்தின்கண் தன் கூந்தலின்கண் உதயணமன்னன் சூட்டிவிட்ட அம்மலர் மாலையை அணிந்ததல்லது தனது அழகிய முகம் விளங்கும்படி பிற மலரை அணியாளாய் ''உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர்'' என்னும் அறம் பற்றித் தன்னைத் தீண்டி மலர் சூட்டிய அவ்வுதயணனுக்கே கற்புக் கடம்பூண்டு ஒழுகும் ஒழுக்கமெல்லாம் அறம் நிரம்பிய நெஞ்சத்தையுடைய தவம் புரிகின்ற அவள் தந்தை உணர்ந்து கொண்டு என்க.
 
(விளக்கம்) அறிவதறியாப் பருவம் என்றது பேதைப் பருவத்தை. செறிவு - முதுக்குறைவு. செறிவொடு புணர்ந்த செவ்வியள் என்றது பெதும்பைப் பருவத்தை. பெருமகன் - உதயணன். உரிமை - கற்புரிமை.