பக்கம் எண் :

பக்கம் எண்:86

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           வளங்கெழு மாவி னிளந்தளி ரன்ன
           நயத்தகு மேனியு நல்லோர் நாடிய
     85    பயப்புள் ளுறுத்த படியிற் றாகக்
           கைவரை நில்லாப் பையு ளொடுக்கி
           உட்கு நாணு மொருங்குவந் தடைதர
           நட்புடைத் தோழி நண்ணுவன ளிறைஞ்ச
           மேதகு வையத்தின் மெல்லென விழிந்து
     90    தாதுகு புனைமலர்த் தண்பூங் காவினுட்
           சூடக முன்கைச் சுடர்க்குழை மகளிரொ
           டாடுத லானா வவாவொடு நீங்கி
 
        (பதுமாபதி கோயிலை வலஞ்செய்தல்)
          83 - 92 : வளங்கெழு,,,,,,,,,,,,,,நீங்கி
 
(பொழிப்புரை) வளம் பொருந்திய மாவினது இளந்தளிர்
  போன்ற கண்டோர் விரும்புந் தகுதியையுடைய அவள் திருமேனி
  தானும் தோழியர் ஆராய்ந்துணரும்படி பசலை பாய்ந்ததாக
  அவளுடைய அறிவின் எல்லையிலே அட,ங்காத துன்பத்தை
  ஒருவாற்றான் அடக்கி அச்சமும் நாணும் ஒருங்கே மிகாநிற்ப மிக்க
  நட்பினையுடைய உசா அத்துணைத் தோழியாகிய யாப்பி யாயினி
  தன்னை அணுகி வணங்காநிற்ப மேம்பாடுடைய அவ்வண்டியினின்றும்
  இறங்கிப் பூந்துகள் சிந்தாநின்ற புனைந்தாற்போன்று செறிந்த
  மலரையுடைய குளிர்ந்த பூம்பொழிலி  னின்றும் வளையலணிந்த
  முன்கையினையும் சுடர்வீசும் குழையினையும் உடைய மகளிரோடே
  விளையாடுதலிலே அடங்காத விருப்பத்தோடே அகன்று போய் என்க,
 
(விளக்கம்) நல்லோர் - தோழியர். நாடிய - நாடும்படி.
  பயப்பு - பசலை. பையுள் - துன்பம். உட்கு - அச்சம். நட்புடைத்
  தோழி என்றது யாப்பியாயினியை. காவினுன் நீங்கி என்க.