பக்கம் எண் :

பக்கம் எண்:862

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
         
    40    உம்மைப் பிறப்பிற் செம்மையிற் செய்த
          தானப் பெரும்பயந் தப்புண் டிறத்தல்
          ஞானத் தாளர் நல்லொழுக் கன்றென
          உறுதவம் புரிந்த வொழுக்கினென் மற்றினி
          மறுவி லேனமர் மாபத் தினியும்
    45    காசி யரசன் மாசின் மடமகள்
          நீல கேசி யென்னும் பெரும்பெயர்க்
          கோலத் தேவி குலத்திற் பயந்த
 
                  (இதுவுமது)
           40 - 47 : உம்மை... ........பயந்த
 
(பொழிப்புரை) ''இப்பிறப்பிலே நடுநின்று செய்த தானத்தின் பெரிய பயன் பிழைக்கும்படி ஒழுகி, ஒருநாட் சாதல் அறிவுடையோர் ஒழுகும் நல்லொழுக்கமாகாது என்று கருதி அச்சான்றோர் மேற்கொள்ளும் மிக்க தவத்தை விரும்பிய ஒழுக்கமுடையேனாயினேன். மேலும் குற்றம் யாதுமில்லாத என்னால் பெரிதும் விரும்பப்படுபவளும் காசியரசனுடைய குற்றமற்ற மடப்பமுடைய மகளும், பெரிய புகழையுடையவளும் அழகுடைய பெருந்தேவியும் ஆகிய நீலகேசி என்னும் பெயரையுடைய என் சிறந்த பத்தினி தானும் என் குலவிளக்காக ஈன்ற'' என்க.
 
(விளக்கம்) உம்மைப் பிறப்பு - இப்பிறப்பு. செம்மை - நடுநிலைமை. தப்புண்டு - பிழைப்ப. ஞானத்தாளர் - மெய்யுணர்வுடையோர். உறுதவம்  - மிக்க தவம். மறு - குற்றம். பெயர் - பெயருமாம். குலத்திற்கு ஆக்கமாகப் பயந்த என்க.