பக்கம் எண் :

பக்கம் எண்:863

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          வீயாக் கற்பின் விரிசிகை யென்னும்
          பாசிழை யல்குற் பாவையைத் தழீஇ
    50    மாதவம் புரிந்தே மான்கண மலிந்ததோர்
          வீததை கானத்து விரதமோ டொழுகும்
          காலத் தொருநாட் காவகத் தாடிப்
          பள்ளி புகுந்து பாவங் கழூஉம்
          அறநீ ரத்தத் தகன்றியான் போக
 
                 (இதுவுமது)
           48 - 54 : வீயா...........போக
 
(பொழிப்புரை) ''கெடாத கற்பினையுடைய விரிசிகை என்னும் பெயரையுடைய பசிய அணிகலனணிந்த அல்குலினையுடைய அப் பெண்மகவினையும் ஏந்திவந்து என்னோடு பெரிய தவத்தினைச் செய்து தீங்கு செய்யாத மான் கூட்டங்களே மிக்க ஒரு மலர் செறிந்த கானத்தே நோன்போடு ஒழுகுங் காலத்தில் யான் தீவினையைக் கழுவும் புண்ணிய தீர்த்தத்தில் ஆடுதற்கு அவ்விடத்தினின்றும் சென்று விட்டேனாக, அப்பொழுது நீ ஒருநாள் அக்காட்டிலே உண்டாடுதல் செய்து எம்முடைய தவப்பள்ளியிலே புகுந்து'' என்க.
 
(விளக்கம்) வீயா - கெடாத. பாவை - ஈண்டு மகவு என்பதுபட நின்றது. மான்கணம் என்றது தீங்கு செய்யாத இயல்பினையுடைய மான்கணம் என்பதுபட நின்றது. வீ - மலர். விரதமோ டொழுகுங் காலத்து யான் அகன்று பாவங்கழூஉம் அறநீர் அத்தத்துப் போக நீ ஒருநாள் பள்ளிபுகுந்து என்க.