பக்கம் எண் :

பக்கம் எண்:865

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          பிணையல் சூட்டினை பெருந்தகை மற்றிது
          புணைதனக் காகப் புணர்திற னுரைஇ
          உற்றது முதலா வுணர்வுவந் தடைதரப்
    60    பெற்றவற் கல்லது பெரியோர் திரிப்பினும்
          கோட்டமில் செய்கைக் கொள்கையின் வழாஅள்
          வேட்கையிற் பெருகிநின் மெய்ப்பொருட் டமைந்த
          மாட்சி நெஞ்ச மற்றுநினக் கல்லது
          மறத்தகை மார்ப திறப்பரி ததனால்
 
              (விரிசிகையின் மாண்பு)
          57 - 64 : பெருந்தகை...........அதனால்
 
(பொழிப்புரை) ''பெருந்தகாய் ! அச்செயலினையே நெடிய இக்கால வெள்ளத்தைக் கடக்கும் தெப்பமாகப் பற்றிக்கொண்டு நின்னையே மணம்புணரும் திறத்தைச் சொல்லிக்கொண்டு நின்
மெய்யைத் தீண்டியதனையே காரணமாகக் கொண்டு, அவட்கு நின்பால் காதலுணர்ச்சி வந்து சேர்தலாலே இவ்வாற்றால் காதலனாகப்பெற்ற நினக்குக் கற்புக்கடம் பூண்ட செவ்விய செய்கையாகிய தன் கொள்கையினின்றும் சான்றோர் தன் மனத்தைத் திருப்பினும் திறம்பாதவளாய் நின்பால் வைத்த காமவேட்கையின்கண் பெருகி நின் மெய்யுறு புணர்ச்சியின்பொருட்டு அமைந்துள்ள மாண்புமிக்க அவள் நெஞ்சம் மறத்தகை மார்பனே நினக்குத் திறப்பதல்லது வேறியார்க்கும் திறத்தல் அரிது. ஆதலால்'' என்க.
 
(விளக்கம்) பெருந்தகை : விளி. இது - நீ பிணையல் சூட்டிய இச்செயல். புணை - தெப்பம். புணை என்றதற்கேற்பக் கால வெள்ளத்தைக் கடத்தற்கு என வருவித்தோதுக. உரைஇ - உரைத்து. உற்றது - தீண்டியது. உணர்வு - காதலுணர்ச்சி. பெற்றவன் : காதலன். கோட்டமில் - வளைதலில்லாத. வழாஅள் - திறம்பாள். காமவேட்கையிற் பெருகி என்க. மார்ப : விளி.