பக்கம் எண் :

பக்கம் எண்:866

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
         
    65    ஞாலம் விளக்கு ஞாயிறு நோக்கிக்
          கோலத் தாமரை கூம்பவிழ்ந் தாங்குத்
          தன்பாற் பட்ட வன்பி னவிழ்ந்த
          நன்னுதன் மகளி ரென்ன ராயினும்
          எவ்வந் தீர வெய்தின ரளித்தல்
    70    வையத் துயர்ந்தோர் வழக்கால் வத்தவ
          யாமகட் டருதுங் கொள்கெனக் கூறுதல்
          ஏம வையத் தியல்பன் றாயினும்
 
        (விரிசிகையின் தந்தை தன் மகளை மணம்
         செய்துகொள்ளும்படி உதயணனுக்குக் கூறல்)
             65 - 72 : ஞாலம்..........ஆயினும்
 
(பொழிப்புரை) "''வத்தவ வேந்தே! உலகத்தை ஒளியால் விளக்குகின்ற ஞாயிற்று மண்டிலத்தின் எழுச்சிநோக்கி அழகிய தாமரை மலர் இதழ்விரிந்து மலர்ந்தாற்போல ஒருவர் தம்பால் காதலால் நெகிழ்ந்த நெஞ்சத்தையுடைய நல்ல நெற்றியையுடைய கன்னி மகளிர் யாரேயாயினும் அவர்தம் காமத்துன்பம் தீரும்படி அவர்பாற் சென்று அளி செய்தல் இந்நில உலகத்தே சான்றோர் வழக்கம் ஆகும். வேந்தே ! இன்பமிக்க இவ்வுலகத்தின்கண் ஈன்றோர் ''யாம் எம்மகளை நினக்குத் தருவேம்! ஏற்றுக் கொள்க!'' என்று முற்படக் கூறுதல் இயல்பன்று. ஆயினும்' என்க.
 
(விளக்கம்) ஞாலம் - உலகம். கூம்பு - குவிதல், தன்பால் : ஒருமைப்பன்மை மயக்கம். தம்பால் என்க. என்னர் - யாரே. எவ்வம் - துன்பம். வத்தவ : விளி. ஏமம் - காவலுமாம்.