பக்கம் எண் :

பக்கம் எண்:867

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          வண்டார் தெரியல் வாண்முகஞ் சுடரப்
          பண்டே யணிந்தநின் பத்தினி யாதலிற்
    75    பயந்தனர் கொடுப்ப வியைந்தன ராகுதல்
          முறையே யென்ப விறைவ வதனால்
          யானே முன்னின் றடுப்ப நீயென்
          தேனேர் கிளவியைத் திருநா ளமைத்துச்
          செந்தீக் கடவுண் முந்தை யிரீஇ
    80    எய்துத னன்றெனச் செய்தவ னுரைப்ப
 
                    (இதுவுமது)
            73 - 80 : வண்டார்............உரைப்ப
 
(பொழிப்புரை) "''இறைவனே! நீதானும் முன்னரே அவளுடைய ஒளிமுகம் விளங்கும்படி வண்டுகள் பொருந்தும் மலர் மாலையினை அணிந்தமையால் அவள் நின் பத்தினியே ஆவள். இங்ஙனம் களவு வகையாலே நீ மணந்துகொண்ட அவளை அவள் இருமுது குரவரும் வதுவை முறையால் நினக்கு வழங்கு உடம் பட்டவராதல் முறையே ஆதலின், அவள் தந்தையாகிய யானே முன்னின்று அவளை நின்பால் சேர்ப்ப, நீ என் வேண்டுகோட்கிணங்கி மணத்திருநாள் குறிப்பிட்டுச் சிவந்த தீக்கடவுளின் முன்னர்த் தேன் போன்ற இனிய மொழியையுடைய அவளை இருத்தி வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கோடல் நன்றாகும்,' என்று பெரிதும் செய்த தவத்தையுடைய அத்துறவோன் கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) தெரியல் - மாலை. பத்தினி மனைவி. பயந்தனர் - ஈன்றோர். என்ப : அசை. இறைவ : விளி. அடுப்ப - சேர்ப்ப. திருநாள் - மணச்சடங்கு நிகழ்த்தும் விழாநாள். முந்தை - முன்பு. இரீஇ - இருத்தி.